
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே.
English Meaning:
When in sex union,The male flow in force dominates
The infant is born with Tamasic qualities of Rudra;
When the flow in reverse is,
The Sattvic quality of Hari dominates;
When the two in balance flow;
The Rajasic quality of Brahma prevails;
He is to kingship born
In whom gunas three proportionate sway.
Tamil Meaning:
தந்தையும் தாயும் கூடுங்காலத்துக் காமம் மிக்கிருப்பின், பிறக்கும் மகன் தாமத குணம் மிக்கிருப்பான். காமம் குறைந்திருப்பின், மகன் சத்துவகுணம் மிக்கிருப்பான். காமம் மிகுதலும் குறைதலும் இன்றி அளவிற்பட்டதாக இருப்பின், மகன் இராசதகுணம் மிக்கிருப்பான். இம்முத்திறத்து மைந்தருள் சத்துவ குணம் மிக்கவன் அரசனாதற்கும் உரியவனாவான்.Special Remark:
எதிர்த்தல் - கூடுதல். இறையவன் - உருத்திரன். ``அரியவன்`` என்பதில் அவன், பகுதிப்பொருள் விகுதி. `மைந்தன் அரசும் ஆளும்` என உம்மையை மாற்றி உரைக்க. உருத்திரன், மால், அயன் என்னும் குணமூர்த்திகள் மூவரும் தொழிலால் முறையே தாமதம், சாத்துவிகம், இராசதம் என்னும் குணத்தினராதலின், அக்குணம் மிக்க மைந்தரை அவர்களாகவே கூறினார். அதனானே, `அம்மைந்தர்க்கு அத்தேவர், இயக்கத் தேவராய் (அதிதேவராய்) நிற்பர்` என்பதும் கொள்ளப்படும். இருவரிடத்தும் காமம் ஒருவகையாய் நில்லாது மாறி நிற்பின், இங்குக் கூறிய பயன் தந்தையின்பால் வைத்துக் கொள்ளப்படும். என்னை வித்தின்கண் உள்ளதே விளைவின் கண்ணுமாம் ஆதலின், ``மகனறிவு தந்தை யறிவு`` (நாலடியார், 367) எனப் பிறவிடத்தும் கூறப்படுதல் காண்க.தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
என்னும் திருக்குறளும் (குறள், 114) இப்பொருள்மேல் நோக்குடையதேயாம். இதனால், `தோன்றும் கருவினது வினைக்கு ஏற்பச் சிவன் தந்தை தாயரது கூட்டத்தில் அவர்கட்கு இந்நிலையே விளைப்பன்` என்றவாறு. `பேர் ஒத்தமைந்தன்` என்பதில், ``பேர்`` என்றது, முன்னர்க் கூறிய மூன்றனுள் ``அரி`` என்பது, அரசனை மால் எனக் கூறும் வழக்குப்பற்றிக் கொள்ளப்படும். ஏறுதல் முதலியவற்றிற்குத் தந்தை உடற்பொருளாகிய வெண்டுளியையே வினை முதலாக உரைப்பர்; அது பொருளாயின் எடுத்தோதலே வேண்டும் என்க.
இதனால், ``பண்புறுகாலமும்`` என மேற்கூறப்பட்ட (தி.10 பா. 445) பண்புகளைச் சிவபெருமான் கருவில் அமைக்குமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage