
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.
English Meaning:
The infant-seed,The damsel in her womb bore
Nourished by bright milk
That is fed by Sakti in Eye-brow Centre Grew,
Beaming like the golden rays of rising sun
Inside, it took form appropriate.
Tamil Meaning:
தாய் தனது கருப்பையில் ஏற்றுக்கொண்ட குழவி, முதற்கண் தந்தையது நடுநாடியில் தீயின் கூறாக விளங்கி முதிர்ந்து, பின் தாயது கருப்பையினுள்ளே ஞாயிற்றின் நிறம்போலும் செந்நிறத்தை உடையதாய் முற்றி, அதன்பின்னர், வகைபடத் தோன்றுகின்ற உறுப்புக்களை உடையதாகும்.Special Remark:
தால் - தாலு; நாக்கு. நாக்கின் முதலிடம் நடுநாடி (சுழுமுனை) ஆதல் பற்றி இவ்வாறு கூறினார். சோதி - தீ. பால் - பகுதி. `சோதியாம் பாலாய்` என ஆக்கம் கொடுக்க. இரண்டிடத்தும், `உள்ளே வளர்ந்து` என மாற்றுக. `தந்தையது, தாயது` என்பன ஆற்றலாற் பெறப்பட்டன. பொருந்துதல் - வளர்ந்து பொருந்துதல். கரு, தாயது செந்நீரால் முதற்கண் செந்நிறம் உடையதாயே இருக்கும் என்க.தந்தையது வெண்டுளியை, `நீர்க் கூறு` என்பராயினும், அதன்கண் உள்ள உயிராற்றல் தீயின் கூறேயாதலை இந்நூலால் அறிகின்றோம். இவ்வுயிராற்றலை, இக்காலத்தார் `அணு` என்பர். `நீர்` என்னாது, `துளி` (விந்து) என வழங்குதலும் நுண்ணிதாதல் பற்றியும், கருவாகி நிலைபெறுதல் சிறிதளவேயாதல் பற்றியுமாம். தந்தையது உடற் கூற்றில் வளரும் உயிராற்றல், தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளினுள் புகுந்து கெடாது நிற்றலே கருத் தங்குதலாம். குழவி ஒன்றாதல் பலவாதற்கும் உயிராற்றல் புகப்பெறும் பூப்புப் பொருள்களின் எண்ணிக்கையே காரணம். இக் காரணங்கள் முதற் காரணங்கள் ஆதலின், பிறவாறு மேற்கூறியன பலவும் துணைக் காரணங்களேயாம் என்க. தாயது வயிற்றில் வந்தபின் வளருமாறு கூறுவார், அதற்கு முன்னர் வளர்ந்தவாறும் உடன் கூறினார். இதனால், கரு வளருமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage