
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.
English Meaning:
He fashioned this body,Into that body He breathed life;
And set gates nine;
And then into the lotus-like cranium
He lit the Fire (of Divine Jnana),
The Lord made these,
And Him I salute in endearment intense.
Tamil Meaning:
சிவபெருமான், உடலை அமைத்து, அதில் உயிரைக் கூட்டிய குறிப்பை உணர்ந்து, அவ்வுடல் நிலை பெறுதற் பொருட்டு அதில் நீர்மடைபோல் உள்ள ஒன்பான் துளைகளையும் அமைத்து, உறுதிப்பாடுள்ள நெஞ்சத் தாமரையின் மேல் தனது உருவத்தைத் தீயின் முனைபோல வைத்துள்ள அவனையே கூடி நான் இன்புறுகின்றேன்.Special Remark:
`நீவிரும் அவ்வாறு அவற்றை உணர்ந்து அவனைக் கூடுதலே உடல் எடுத்ததன் பயன்` என்பது கருத்து. ``உயிர் வைத்தவாறும்`` என்பதன்பின், `உணர்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``மடைவைத்த`` என்பதில் வைத்த, உவம உருபு. திடம், உண்மை அன்பு. `இருதய கமலத்தின் மேல் இறைவன் தீக்கொழுந்து வடிவாய் உள்ளான்` என, உபநிடதங்களில் தகர வித்தை கூறும் வழிகூறப் பட்டது. யோகியர் அதனையே நினைத்தலின், ``தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசன்`` என்றார். ``சென்னி`` என்றது மேல் இடத்தை. உடம்பொடு நிற்குங்கால் தியானத்தாலும், பாவனையாலும் இறைவனைக் கூடும் இடம் இருதயமும், புருவ நடுவுமேயாக, அவற்றை யொழித்து `சென்னித் தாமரை` என மொழிமாற்றி, உடம்பை விட்டுப் போகுங்கால் பற்றும் இடமாகிய பிரம ரந்திரத்தைக் கொள்ள வேண்டாமை அறிக. ``கைகலந்தேன்`` என்பதில் கை, இடைச்சொல்.இதனால், உடம்பினை அளித்த தலைவனது குறிப்பை உணர்ந்து, அதன்கண்ணே அவனைக் கூடும் முறையறிந்து கூடுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage