
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொண்புற நாடிநின் றோதலு மாமே
English Meaning:
Seeking pleasure, the two met;In pasa`s misery was it born and bred;
And having grown to stature
Grew to manhood here below;
Well may it seek the Ancient One
That before all worlds was.
Tamil Meaning:
ஒருவன், ஒருத்தி ஆகிய இருவர் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப் பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின், அவ்வுயிர், தான் நிலத்தில் வந்து சேர்தற்கு முன்பு கருப்பையினுள் உள்ள துன்பத்தால் `விரைவில் வெளிப்படல் வேண்டும்` என்று விரும்பிப் பெரிதும் முயன்று வெளிப் பட்டுப் பிறந்த செய்தியைப் பின் அறிவுடையோர் அவ்வுயிரும் தம்போல அறிவைப் பெறுமாறு அதற்குச் சொல்லுதல் கூடுமோ!Special Remark:
`இருவரும் கூடினமை தம் இன்பம் கருதியல்லது, ஓர் உயிர் மக்கள் உடம்பைப்பெற்று உய்தல் வேண்டும் என்னும் கருத்தினால் அன்று` என்பார் ``இன்புற நாடி இருவரும் சந்தித்து`` என்றும், `அக்கூட்டத்தால் அவர் பின்பு குழந்தையை வளர்க்கக் கடமைப்பட்டவராய்த் துன்புறுகின்றனர்` என்பார், ``துன்புறு பாசத்தில் தோன்றி`` எனவும் கூறினார். இவையெல்லாம் பெரும்பாலராய் உலகியலின் நிற்பாரது செயல்பற்றிக் கூறியன. `உலகுய்ய மகப்பெறுவான்` (தி.12 பெ. பு. திருஞான - 59) சந்திப்பாரும் உளர் என்க. ``சந்தித்து`` என்றதனை, `சந்திக்க` எனத் திரிக்க. ``நிலத்தின்`` எனப்பின்னர் வருகின்றமையின், ``உற நாடி`` என்றொழிந்தார். ஒண்மை, `ஒண்பு` என வந்தது. ஒண்மை - அறிவு. `பிறத்தற்கு முன் தான் பட்ட துன்பத்தை உணரின், அவ்வுயிர் மீளப் பிறவி எய்தாது வீடடைய விரையும்; அறிவிப்பினும் அதனை அறியமாட்டாமையால், மேலும் அது பிறவிக்கே வழிதேடுகின்றது; இஃது அதன் வினையிருந்தவாறு` என்றதாம். நான்காம் அடி, இன எதுகை. `தொன்பு` என்பது பாடம் அன்று.இதனால், இட்டான், ஏற்றாள் என்பவரேயன்றி இடப்பட்ட அது தானும் தனது நிலையைத் தான் அறியாது நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage