
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு
நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.
English Meaning:
The Lord is Limitless Light;He kindles all life from Primal Womb;
He stirs the liquid-seed of Causation;
He endows it with form expansive;
Him I seek in heaven and earth.
Tamil Meaning:
நான்கு வேத சிவாகமங்கள் அனைத்திலும் கேட்டு நின்றது, `என்றும் அழிவில்லாத பேரொளியாகிய சிவபெருமானே உலகனைத்திற்கும் முதற்காரண வடிவாய் நின்று அவற்றைக் கோக்கின்றான்` என்பது. எனவே, தாயது வயிற்றில் நெகிழ்ந்து பட்ட கருவை உறுதிப்படுத்தி உருவாக அமைப்பவன் அவனே. ஆதலின், தந்தை தாயாரது உடற்கூட்டம் அவனது செய்கைக்கு ஒரு கருவியாய் அமையும் அளவேயாம்.Special Remark:
மூட்டுதல், தேர் உறுப்புக்களை ஒருங்கிணைத்துத் தேராக்குதல்போல, உலகுறுப்புக்கள் பலவற்றைத் தொகுத்து உலக மாக்குதல். `யோனி` என்பதற்கு `வாயில் அல்லது காரணம்` என்பதே பொருள். உலகிற்கு முதற்காரணம் மாயையாயினும், வித்திற்கு நிலம் போல இறைவன் அதற்கு நிலைக்களமாதல் பற்றி அவனையே, `முதற் காரண வடிவினன்` என்று நூல்கள் சில இடங்களிற் கூறும். அவ் வாற்றால், ``முதல் யோனி மயன் அவன்`` என்றார். `அவன் மூட்டு கின்றான்` என முன்னே கூட்டுக. ``கேட்டு நின்றேன்`` என்பதன்பின், `அது` என்னும் எழுவாயும், ``மூட்டுகின்றான்`` என்பதன்பின், `என்பது` என்னும் பயனிலையும் அவாய் நிலையாய் நின்றன. மூட்டு தற்கு, `உலகம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. `கருவை உருவாக நீட்டி நின்று கூட்டுகின்றான்` என்க. `ஆகத்து உளவாதல்` என ஒருசொல் வருவிக்க. நேர்படுதல் - நினையாததொன்றாய் இடை வருதல். இவ்வாறு கூறியது, அதன் தலைமையின்மை உணர்த்தற்கு.இதனால், கருவை உருப்படுத்துகின்றவன் சிவபெருமான் என்பதே உண்மை நூல் துணிபாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage