ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
    அருஉரு ஆவதும் அந்த உருவே
    திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
    உருவரு வாளும் உமையவள் தானே.
  • 10. அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
    தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
    தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே`
    கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
  • 11. மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
    நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
    சென்றது தான்இரு பத்திரு நூறுள
    நின்றது தான்நெடு மண்டல மாகுமே.
  • 12. அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
    தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
    எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
    அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.
  • 13. ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
    ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
    மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
    மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.
  • 14. அம்பல மாவ அகில சராசரம்
    அம்பல மாவன ஆதிப் பிரானடி
    அம்பல மாவன அப்புத்தீ மண்டலம்
    அம்பல மாவன அஞ்செழுத் தாமே.
  • 15. கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன
    ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
    நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
    பாடிய வாறொரு பாண்டரங் காமே.
  • 16. அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
    தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
    புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
    கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.
  • 17. புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
    களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
    துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
    ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.
  • 18. திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
    உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
    கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
    கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.
  • 19. அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
    அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
    தங்கு பயமுன் தருநீல மும்முடன்
    மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.
  • 2. திருவழி யாவது சிற்றம் பலத்தே
    குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே
    உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு
    அருள்வழி யாவதும் அவ்வழி தானே.
  • 20. ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
    கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி
    நீடிய நாதம் பராற்பர தேயத்தே
    ஆடிய நந்தி புறம்அகத் தானே.
  • 21. ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
    அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட
    இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட
    அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
  • 22. ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
    ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய
    ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
    ஏழினை நாடகத் தேஇசைந் தானே.
  • 23. மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
    மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
    மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே
    மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.
  • 24. தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
    மாமணி ஈசன் மலரடித் தாளிணை
    யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
    காமணி ஞாலம் கடந்துநின் றானே.
  • 25. புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
    தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை
    பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும்
    எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.
  • 26. ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
    ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
    ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
    ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.
  • 27. ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து)
    அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத்
    துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட
    அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.
  • 28. தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
    சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட
    வைத்த சராசரம் ஆட மறைஆட
    அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
  • 29. இருவரும் காண எழில்அம் பலத்தே
    உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த்
    திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
    அருளுரு வாகநின் றாடலுற் றானே.
  • 3. நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
    ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
    நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து)
    ஆடும் இடம்திரு அம்பலத் தானே.
  • 30. சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
    அவம் ஆட ஆடாத அம்பர ஆட
    நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
    சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.
  • 31. நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
    வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
    தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
    நாதப் பிரம சிவநட மாமே.
  • 32. சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
    தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
    தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும்
    தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.
  • 33. கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
    வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
    தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
    ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.
  • 34. நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
    பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
    நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
    பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.
  • 35. ஆனந்தம் ஆனந்தம்` என்பர் அறிவிலார்
    ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர்
    ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின்
    ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.
  • 36. திருந்தநற் `சீ` என் றுதறிய கையும்
    அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும்
    பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
    திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.
  • 37. மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
    மருவு மமைப்பு அனலுடைக் கையும்
    கருவின் மிதித்த கமலப் பதமும்
    உருவில் சிவாய நமஎன ஓதே.
  • 38. அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
    அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
    அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
    அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.
  • 39. நீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக்
    கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன்
    மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப்
    பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.
  • 4. வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை
    தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
    களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
    ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.
  • 40. நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
    மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து)
    அந்தர வானத்தின் அப்புரத் தப்பர
    சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.
  • 41. சீய குருநந்தி திருவம் பலத்திலே
    ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
    தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
    ஆயுறு மேனி அணைபுக லாமே.
  • 42. தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும்
    தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை
    ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
    ஆனால் அரனடி நேயத்த தாமே.
  • 5. தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
    ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
    மாயைமா மாயை கடந்துநின் றார்காண
    நாயகன் நின்று நடம்செய்யு மாறே.
  • 6. கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
    கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
    கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
    கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.
  • 7. இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
    நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
    படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
    அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.
  • 8. சத்தி வடிவு சகலஆ னந்தமும்
    ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம்
    சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு)
    ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.
  • 9. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
    உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
    பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
    சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.