
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழினை நாடகத் தேஇசைந் தானே.
English Meaning:
Dance of Seven MelodiesAs seven subtle melodies within the seven articulated,
As the seven letters they denote,
As one harmony in the seven musical notes,
He descended and pervaded;
In the seventh state beyond the six adharas
That Jnana yoga crosses
Is Aum Paranjothi, (the Divine Light)
In the dance of seven melodies He danced.
Tamil Meaning:
ஏழ் நரம்புகளில் ஏழு வகையாய்த் தோன்றி, அவற்றிற்குப் பொருந்திய ஏழ் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு, அந்த ஏழ் எழுத்துக்களில் ஒன்றே ஏற்றத்தின் தொடக்கமும், இறக்கத்தின் முடிவுமாய் நிற்க அமையும் ஏழு பண்களினாலும் பாடப்படுகின்ற நன்னெறியை எங்கள் சிவபெருமான் ஏழிசைகளோடு கூடிய தனது கூத்திலே பொருந்தி ஆடுகின்றான்.Special Remark:
ஏவு வகைகளாவன, `குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்` என்பன. இவற்றிற்குப் பொருந்திய எழுத்துக்களாவன முறையே `ஆ` முதல், `ஔ` ஈறான நெட்டெழுத்து ஏழுமாம். இவற்றை,``களையறு குரலே துத்தம்,
கைக்கிளை உழையி னோடே,
இளியொடு, விளரி, தாரம்
என்ப ஏழிசையின் நாமம்``.
``ஆங்குள ஆ,ஈ ஊ,ஏ,
ஐ,ஓ,ஔ என்னும் ஏழும்
தீங்கிலா அக்க ரங்கள்
செப்பும்ஏ ழிசைக்குந் தானே``9
என்னும் சூடாமணி நிகண்டாலும் உணர்க. முற்காலத்தில் இருந்த யாழின் முன்னேற்றமாக வீணை தோன்றினாற்போல, முற்காலத்தில் இருந்த இசையின் பெயர்கள், இசையின் எழுத்துக்களின் முன்னேற் -றமே, ``சட்சம் இடபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நீடாதம்` என்னும் பெயர்களும், `ச,ரி,க,ம,ப,த,நி` என்னும் எழுத்துக் களும் என்க. எழுத்துக்களில் முதலாவதினின்று இசை மெல்ல மெல்ல உயர்ந்து உச்சத்தை அடையும்பொழுது அந்த எழுத்தே சொல்லப் பட்டு, மீண்டும் அதினின்றும் மெல்ல மெல்ல இறங்கி முடிவடையும் பொழுதும் அந்த எழுத்தே சொல்லப்படுதல் பற்றி, ``ஏழினில் ஒன்று ஆய், இழிந்தமைந்து ஒன்றாய்`` என்றார். ஆதல் - மேன்மேல் உயர்தல். பண்கள் ஏழாவன, கோடிப்பாலை, செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை` என்னும் ஆதாரப் பண்கள். `இவற்றினின்றும் பிறக்கும் பிறவிப் பண்கள் நூற்று மூன்று` எனவும் `மற்றும் திறங்கள்` எனவும், `திறத்திறம்` எனவும் கூறுவர். இவையெல்லாம் இசைத் தமிழ் நூல்களில் சொல்லப்பட்டன. அந்நூல்கள் பலவும் இறந்து போயின. சிலப்பதிகார உரைகளில் சிறிது காணப்படுகின்றன.
நமது சிவநெறிப்பொருள்கள் இயற்றமிழ்ச் செய்யுட் -களிலன்றியும், இசைத்தமிழ்ப் பாட்டுக்களிலும் இனிமை பெறச் சொல்லப்பட்டமையை, ``ஏழினிற் சன்மார்க்கம்`` என்றும், அப் பொருள்களெல்லாம் பெருமான் தனது கூத்தில் குறிப்பினால் தோன்ற ஆடுதலை, ``ஏழிசை நாடகத்தே இசைந்தானே`` என்றும் கூறினார்.
`இயைந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஏழது` என்பதில் `அது` பகுதிப்பொருள் விகுதி. அவ்விடத்து, ``எழுத்து`` என்றது சாதியொருமை. கூத்தின் வினையாகிய இசைதல் அதனைச் செய்வான் மேல் ஏற்றப்பட்டது.
இதனால், இசைத்தமிழ்ப் பாடல்களால் இனிமை பெற விளக்கப்படும் பொருள்கள் எல்லாம் திருக்கூத்தில் விளங்குதலாகிய அற்புதம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage