
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.
English Meaning:
He is Tattvas and Their GoalThe Lord is the beginning of Vedas
He is beyond Nada Tattvas;
(Knowing this not,)
They sought the pleasures of this world
And in them revelled;
He is the Tattvas in order placed
And their Lord too at once;
In that in separateness
He commingling stood.
Tamil Meaning:
வேதாந்தத்திலே விளங்குகின்ற நம் சிவன், நாத தத்துவத்தையும் கடந்த முதல்வன். அவனை இந்தப் பூமியிலே இங் குள்ளவர்கள் தெளிவாகக் கண்டு ஆனந்தத்தை அடைகின்றார்கள். அது பற்றி அவன் அவர்களிடத்து வைத்த கருணையும், நடுவு நிலைமையும் முரணாகிவிடவில்லை; நேரொன்றியே நிற்கின்றன. அவ்வாறு உள்ளது அவன் இப்பூமியில் இயைந்து நிற்கின்ற நிலை.Special Remark:
`நாத தத்துவம்` என்பது கடைக்குறைந்து `நாதத்துவம்` என நின்றது. இனி `நாதத்தின்மை` எனக்கொண்டு `சுத்த மாயை` எனினும் ஆம். சிறப்பும்மையும்; `கடந்த` என்பதன் ஈற்று அகரமும் தொகுத்தலாயின. ``மறை`` என்றது அதன் முடிவை. `மறை நம்பி நாதத்துவமும் கடந்த ஆதி` என்க. இதனை அனுவதித்து ஓதினார், அவன் மிகக் கீழ்த் தத்துவத்தின்கண் விளங்கிநிற்கும் எளிமை யுணர்த்தற்கு. பூ - பூமி. `பூத் தத்துவம்` என ஒற்று மிகாமை வடநூல் முடிவு. பொலிந்து, `பொலிய` என்பதன் திரிபு. இன்பம் எய்துதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. `நேசத்துவம்` என்பது, எதுகை நோக்கித் திரிந்தது. நேசம் இறைவனுடையது இன்பம் எய்துவார் பலராகலின், அவர்மேல் வைத்த நேசமும் பலவாகச் சொல்லப்பட்டது. நீதி, ``மோகம் அறுத்தவர்க்கே முத்தி கொடுப்பம்`` எனச் சொல்லி வைத்த நீதி. அது பேதப்பட்டாமை, அவனது காட்சியாலே மோகம் அற்றமையினாலாம். ஆகவே, அவரது நிலைமை அவ்வாறாகும்படி அவன் இவ்வுலகில் இயைந்து நிற்கின்றான்` என்பதாம். இனி, `நேதியும்` என்பதே பாடமாகக் கொண்டு ஏற்குமாறு உரைப்பர்.``பின்னி நின்றான்`` எனப் பொதுப்படக் கூறினாரேனும் இங்குச் சிறப்பாகக் கூத்தனாய் நிற்றலைக் கூறுதலே கருத்தென்க. இன்பம் எய்துதல் அதனானே சிறக்க நிகழ்தலின்.
இதனால், திருக்கூத்தினால் சிவநெறி உண்மை அற்புதமாக விளைதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage