
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே
உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.
English Meaning:
The Form-Formless Dancer is GuruparaThe Holy Way is Form-Formless
In the Holy Temple of Chittambara,
The Form that dances there
Is the Form of Guru within,
They who full know,
He is Form-Formless
They receive His Grace Divine
That Jnana Way.
Tamil Meaning:
ஒருவனுக்கு வீட்டு நெறியாவது, அவனது உள்ளத்தில் அவனுக்குக் குருவாய் வந்து அருள் புரிந்தவர் நீங்காதிருக்க, வெளியில் சிற்றம்பலத்தில் அம்பலவாணர் ஆடுதலேயாகும். (உள்ளத்தில் குருவைத் தியானித்தலும், வெளியில் திருக்கூத்தைக் காணுதலுமேயாகும்` என்பதாம்.) உண்மையை ஊன்று உணர்ந் தோர்க்கு மூவகைத் திருமேனிகளும் ஞான நெறியும் அவையேயாம்.Special Remark:
`திரு` என்பது வீடாதலை, ``போகமும், திருவும் புணர்ப்பானை``3 என்பதனால் அறிக. `உன் குருவடிவு ஆக` என மாற்றி, ``திருவழியாவது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``குணக்கும் உருவே`` என்றாராயினும் `உருவாய்க் குனித்தலே` என்றலே கருத்தென்க. `குனித்தல்` என்றதும் அதனைக் காணுதலையே. உற்று உணர்ந்தோர்க்கு, உருவாவதும், அருவாவதும், அருள்வழி யாவதும் அவ்வழியே என இயைத்து முடிக்க. தான், அசை, வழி-வாயில். `உரு, அரு` என்பவற்றைக் கூறவே, உருவாருவமும் கொள்ளப்படும். தியானிக்கப்படுவதும் குனிப்பதும் உருவம் முதலியன ஆவனவும் வேறுவேறாய் இருக்க, அவற்றை, ``குனிக்கும் உருவே`` என, அஃது ஒன்றேயாகக் கூறியதுதான் இங்குக் குறிப்பிட்ட அற்புதம்.``சிறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தை
யுள்ளுக உறைவான்``
என்றவிடத்தும் இவ்வற்புதம் குறிக்கப்பட்டமை காண்க.
இதனால், மேற்கூறிய சமட்டி நிலையில் உள்ளவைகளில் தலையாயதாகிய ஞான நிலை, சிறப்புப் பற்றி வேறெடுத்துக் கூறப்பட்டது.
``மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற
வாணுதல் மான்விழி மங்கை யோடும்
பொய்ம் மொழி யாமறை யோர்கள் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே!
``எம்மிறையே` இமை யாத முக்கண்
ஈச!என் நேச!இ தென்கொல் சொல்லாய்;
மெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே``
``அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ,
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கய லார்புனற் செல்வம் மல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள
கங்குல் விளங்கெரி யேந்தியாடும்
கணபதி யீச்சரங் காமுறவே``1
``பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றி நின்று
நாடகம் ஆடும்நள் ளாறுடைய
நம்பெரு மான்!இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தை மார்கள்
துணைவ ரொடுந்தொழு தேத்தி வாழ்த்த
ஆடக மாடம் நெருங்கு கூடல்
ஆலவ யின்கண் அமர்ந்தவாறே``
``பருமதில் மதுரைமன் அவையெதிரே
பதிகம் தெழுதிலை யவை யெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே``2
``... ... ... ... பேணு பெருந்துறையுட் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்``3
என்றாற்போல ஏனை ஆசிரியர்களும் ஏகதேசியாய்க் காணப் படுபவன் எங்குமாய் நின்று அருள்புரிதலை வியந்தருளிச் செய்தல் காணத்தக்கது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage