
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.
English Meaning:
Basic Spiritual Categories.So impelled, streamed out of me in measures full
The Jneya, the Jnana, and the Jnathru,
The Maya, and the Parayaya that in Mamaya arise,
The Siva and the Agochara Veeya.
Tamil Meaning:
இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.Special Remark:
சுத்த தத்துவம் காலம் கடந்தன ஆதல்பற்றி, `நித்தப்பொருள்` என்று சொல்லப்படுதலால், காலத்திற்கு உட்பட்ட ஏனைத் தத்துவங்களை, `மாயம்` என்றார். மாயம் - மாய்தலுடையது. `பரை` என்றது பரநாதத்தை. ஆயம் - கூட்டம்; தொகுதி. `பரை முதலாகிய தொகுதி` எனச் சுத்ததத்துவங்களைக் குறித்தவாறு. மாயையைக் கூறவே, ஏனைய கன்ம ஆணவ மலங்களும் பெறப் படும். `அறிபவன்` எனப்பட்டது பசுவாகிய ஆன்மாவே என்பது வெளிப்படை. `ஞாதுருவத்தை` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. பதியாகிய இறைவன் அறியப்படும் பொருளாய் நிற்றல் தடத்தநிலையிலாதலின், ``ஞேயம்`` என்றது தடத்த சிவனையாம். ஞானம், அவனது சத்தி. `சொரூப சிவன்` என்பது உணர்த்துதற்கு, ``அச்சிவன்`` எனச் சேயனாகச் சுட்டிக் கூறினார். அகோசரம் - அகப் படாமை. பசு பாசங்களின் உண்மை இயல்புகளும் வாக்கு மனங்கட்கு அகப்படுவன அல்லவாதல் பற்றி அனைத்தையும் `அகோசரம்` என்றார். `பீசம்` என்னும் ஆரியச்சொல். `வீசம்` என்று ஆகிப் பின் எதுகை நோக்கி, `வீயம்` எனத் திரிந்தது. பீசம் - வித்து. `சிறிய அளவில் செய்யப்படினும், `இந்நூலுள் ஆகமப்பொருளாகிய முப்பொருள் இயல்பு முழுவதும் எஞ்சாமற் கூறப்படும்` என்றவாறு. துணிவு தோன்ற, ``விளக்கியிட்டேன்`` என இறந்த காலத்தாற் கூறினார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage