ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

English Meaning:
Dispels Gloom

I am without illusion in this world, praising and worshipping day and night the great Shiva, who is the first for the people of the earth and the gods of the heavenly world, and who made my body fall at the place he came.
Tamil Meaning:
மக்கள் வாழும் மண்ணுலகத்தவருக்கும், வானுலகத்தின் தெய்வங்களுக்குமான முதல் இடம் வகிப்பவனும், அவன் வந்த இடத்தில் என் உடலை விழச்செய்தவருமான சிவபெருமானை நான் பகலிரவும் வணங்கி, பாடிச் சிறப்பித்து, மாயா துரத்தும் இவ்வுலகில் மயக்கம் இன்றி இருப்பேன்.
Special Remark:
சிறப்புப்பற்றி, ``அகலிடத்தார்`` என மக்களையே கூறி னாராயினும், இனம்பற்றிப் பிற உயிர்களும் கொள்ளப்படும். நிலை பேறு உடைமைபற்றிக் காரணத்தை, ``மெய்`` என்றார். காரணம் இங்கு வினைமுதல். அகலிடத்தார் என்றதனோடு இயைய `அண்டத்தார்` என நின்றதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. அனைத்துயிர்க்கும் முதல்வனாதலை வலியுறுத்தற்பொருட்டு இரு தொடராக வகுத்தருளிச் செய்தார். ``விட்டான்`` என்பது `விடு வித்தான்` என்னும் பொருளது. `போத இட்டார்` எனப் பிரித்து, `மிக இருத்தினான்` என்றலும் ஆம். நாயனாரது உடம்பை நீக்கி அவரை மூலன் உடம்பில் இருக்குமாறு இறைவன் செய்த வரலாறு பெரிய புராணத்துள் விரித்துரைக்கப் பட்டது. `எம்மெய்யை, என்றனை` என்பனவும் பாடங்கள். ஐம்புலன் கள் உயிர்செல்லும் வழிக்கு மாறாய் நின்று மறித்தலின், அவற்றின் வடிவாகிய உலகத்தை ``இக லிடம்`` என்றும், அஃது அன்னதாயினும், மேற்கூறியவாறு நான் இறை நிறைவில் நீங்காது நிற்குமாற்றால் மயக்க மின்றி இருக்கின்றேன் என்பார், ``இருள் நீங்கி நின்றேன்`` என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டாலும், `இந்நூல் அருள்வழி நின்று செய்யப்படுவதன்றி, ஆன்ம போதத்தின் வழிநின்று செய்யப்படுவ தன்று எனவும், அன்ன தாயினும். பதி போதமும் ஒரோவழி உள தாங்கொல்லோ` என ஐயுறல் வேண்டா எனவும் கூறி, நூலது சிறப்பு உணர்த்தப்பட்டது.
இவற்றின் பின்னவாகப் பதிப்புக்களில் காணப்படும் ``சிவனோ டொக்கும் தெய்வம்`` என்பது முதலிய பாட்டுக்களும், வேதச்சிறப்பு, ஆகமச்சிறப்பு, திரிமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறை என்னும் அதிகாரப் பாட்டுக்களும் எடுத்துக்கொண்ட பொருளையே கூறலின், அவை நூற்பாட்டுக்களன்றிப் பாயிரப் பாட்டுக்களல்லவாதல் இனிது விளங்கும். அதனால், ஏடுசேர்த்தோர் அவற்றை முறைபிறழக் கோத்தார் எனவே கொள்க.
இந்நூல் பொருள் வரலாற்றுமுறையாற் கேட்டுச் சொல்லப் பட்டதன்றித் தாமே தம் மனவழிப்பட்டுச் சொல்லியதன்று என்றற்கு இது முதல் ஏழு பாட்டுக்களால் தமது அருட்குடி வரவு கூறுகின்றார். குரு பாரம்பரியம் - ஆசிரியத் தலைமுறை.