
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

கடவுள் வாழ்த்து
ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
English Meaning:
In Praise of God: One is manyThis profound hymn celebrates the divine nature encapsulated in a unique numerical progression. It beautifully illustrates how the One manifests in multiple forms and realms, from His sweet grace in the Two to His omnipresence across the Seven Worlds, culminating in an eternal and infinite presence. Through poetic elegance, the hymn honors the multifaceted greatness of God.
Tamil Meaning:
அவனது அருள், அறக்கருணை, மறக்கருணை என இரண்டாய் இருக்கும். அவாற்றியில் அவன் இலயம், போகம், அதிகாரம் என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் ஆகியவற்றை இயல்பாக உணர்ந்து, உலகிற்கு உணர்த்தினான். செவிவழியாகவும் உள்ள ஐம்பொறிகளின் வழி வருபவை இப்போது ஈடுபடுகின்ற ஐம்புலன்களின் மேலானவை ஐந்து அவாவினையும் வென்றான். மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை ஒவ்வொரு கட்டமாக விரிந்தான். பிரம லோகம், விட்டு லோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம் என்று ஏழுலகங்களுக்கும் மேலாக தானே ஆனவனை நெஞ்சே, நீ அறிந்து அடை.Special Remark:
முதற்கடவுளை, `அவன்` எனப் பண்டறிசுட்டாற் கூறுதல் வழக்கு. ``அவன்தானே`` என்றதில் தான் அசைநிலை; ஏகாரம் பிரிநிலை./n``பிரமம் ஒன்றே இரண்டாவதில்லை``1 எனவும், ``மெய்ப் பொருள் ஒன்றே``2 எனவும், வேதமும் கூறுதல் காண்க. ``தனக் குவமை இல்லாதான்`` என்றதும் இப்பொருட்டு. அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியுமாம். இலயம் முதலிய வற்றின் இயல்பையும் ஆறத்துவாக்களின் இயல்பையும் சிவாகமங் களிலும், மெய்கண்ட நூல்களிலும் கண்டுகொள்க./n
``அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொருளின்பம் வீடு - மொழிந்த வாயான்``3 எனவும், ``விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்``4 எனவும், போந்த அருட்டிரு மொழிகளால், அறம் முதலிய நான்கு உறுதிப் பொருள்களையே முனிவர் நால்வர்க்கு நான்கு வேதங்களால் உணர்த்தியருளினான்` என்பது இனிது விளங்கிக் கிடத்தலின், `நான்கு உணர்ந்தான்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. ``உணர்ந்தான்`` என்னுமிடத்து, `தானே` என்பது இசையெச்சம். அவ்வினைச் சொல் உணர்ந்து உணர்த்துதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது./n
``வென்றனன்`` என்றது, `அவற்றொடு பொருந்திநின்றே அவற்றால் திரிபின்றி நின்றான்` என்றவாறு. ``வினையின்நீங்கி`` 5 என்றும், ``பற்றற்றான்``6 என்றும் ஓதியவற்றிற்கும் இவ்வாறே உரைக்கப்படுதல் காண்க. இவற்றானே, ``பொறிவாயில் ஐந்த வித்தான்``7 என்றதும் இப்பொருட்டாயிற்று. ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் - வென்றானை``8 ``மங்கை யோடிருந்தே யோகுசெய்வானை``9 என்பனவும் இக்கருத்தே பற்றி வந்தன. மனைவியோடிருந்த முனிவரைத் திருவள்ளுவர், ``ஐந்த வித்தான்`` 10 என்றதும் இங்கு நினைக்கத்தக்கது./n
நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகட்கு உட்பட்ட புவனங்களை அவற்றிற்கு முதல்வராகிய கடவுளரது உலகங்களாகவும், இறுதிக் கண்ணதாகிய சாந்தியதீத கலையில் இலய புவனங்களை வேறிரண் டாகவும் வைத்து `ஏழுலகம்` என்றலே ஆகம முறை. `பூலோகம், புவ லோகம், சுவலோகம், மகலோகம், தவலோகம், சத்தியலோகம்` என வேதமுறையிற் கூறப்படும் ஏழுலகங்களில் ஏழாவதாகிய உலகம் புவனபதி உலகமாகவும், ஏனைய ஆறும் கீழ்க்கீழ் நோக்க ஒன்றின் ஒன்று தாழ்ந்தோர்க்குரிய உலகமாகவும் மேல் ஆகம முறையிற் கூறிய ஒவ்வோர் உலகத்திலும் உட்கூறுகளாய் அவ்வவ்வுலகங்கட்கு ஏற்ற பெற்றியில் அமைந்துள்ளவை என்பது சிவாகம நூல் துணிவு. கீழ்க்கீழ் உள்ள உலகங்களில் மேன்மேல் உள்ள புவனபதிகட்குரிய இடங்களும் உள; மேன்மேல் உள்ள உலகங்களில் கீழ்க்கீழ் உள்ள புவன பதிகட் குரிய இடங்கள் இல்லை என உணர்க. ``சென்றனன்`` என்றது முற்றெச்சம்./n
``தான் இருந்தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரமும், ஆக்கச் சொல்லும் தொகுத்தல் பெற்றன. தானேயாய் இருத்தலாவது சத்தி யோடு கூடிச் செயற்படுத்தலைத் தவிர்ந்திருத்தல். இதுவும், முதற்கண் ``ஒன்றவன்றானே`` என்றதும் இறைவனது, `சொரூபம்` எனப்படும் உண்மை நிலை. ஏனைய, `தடத்தம்` எனப்படும் பொது நிலை. ஒன்று முதலாகத் தொடங்கி ஆறு ஈறாகக் கூறியது, `ஒருவனே பலவாய் விரிந்து நிற்கின்றான்` என்பது உணர்த்துதற்கு. ``ஏழும்பர்ச் சென்றனன்`` என்றது, `அவ்வாறு விரிந்து நிற்பினும் அவன் மன வாக்கிற்கு எட்டாதவனே`` என்றற் பொருட்டு./n
``எட்டு`` என்றது, சொல் ஒப்புமையால் எண்ணலங்காரத்தை நிரப்பிற்று, ``நால்வாய் ஐங்கரத்தன்``1 என்பதிற்போல. எட்டுதல் - முயன்று பற்றுதல். அம் முயற்சிகள் பலவும் நூலுட் கூறப்படும். ``உணர்ந்து எட்டு`` என்றது, `மேற்கூறியவாற்றால் அவன் ஒருவனே உணரப்படுதற்கும், அடையப் படுதற்கும் உரியவன்` என்பது அறிவித்தவாறு./n
`வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல்` என்னும் மூவகை வாழ்த்துள் இது பொருளியல்புரைத்தல். இதனானே இந்நூல் நுதலிய பொருள் தொகுப்புக் குறிப்பாற் கூறப்பட்டது. அஃது ஆமாறு, `முதற்கடவுள் உளன்; அவன் ஒருவனேயன்றிப் பலர் இல்லை. ஆயினும் அவன் தன்னின் வேறாகாத சத்தியால் `அருளல், மறைத்தல்` என்னும் இரண்டனையும் செய்தற் பொருட்டு, `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூவகை நிலைகளில் நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு, என்பவற்றை அடையும் நெறிகளை உலகிற்கு உணர்த்தித் தான் ஒன்றிலும் தோய்விலனாய் நின்றே எப்பொருளுமாக விரிந்து, அங்ஙனம் விரிந்தவிடத்தும், மன வாக்குக்களைக் கடந்த தனது நிலைமையில் மாறுபடாதே நிற்கின்றான். ஆதலின், அவனை அறிந்து அடைதலே உயிர்கள் செயற்பாலன` எனக் கண்டு கொள்க. நூல்நுதல் பொருள் இங்ஙனம் குறிப்பால் தோன்றவருதல் நூன்முகத்து வரும் கடவுள் வாழ்த்திற்கு இயல்பு என்க./n
இப்பாட்டு இந்நூல் நுதலிய பொருள் இது என்கின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage