ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  

English Meaning:
Import Of Siva`s Dance

"Malangan, listen to the reason I came to Tamil Nadu from Mount Kailash. The Goddess with the blue hue and the primordial Lord Shiva performed the divine dance for the salvation of souls. I have come to convey the philosophies of this dance to others."
Tamil Meaning:
மாலாங்கனே, திருக்கயிலையை விட்டு இத்தமிழ்நாட்டிற்கு நான் வந்தகாரணம் கேள். நீல நிறம் கொண்ட அம்மையும், ஆதிமூல சிவனும், உயிர்களை உய்விக்க திருநடனம் ஆடினர். அந்நடனம் பற்றிய தத்துவங்களை மற்றவர்களுக்கு உரைப்பதற்காகவே நான் வந்தேன்.
Special Remark:
`மாலாங்கன்` என்பவர் நாயனார்தம் மாணாக்கருள் ஒருவர் என்பது மேலே சொல்லப்பட்டது. `மொழிந்த வேதம்` என இயையும். பல தேவர்களையும் பொதுப்பட வைத்துக்கூறிய வேதமும், தான் ஒருவனையே முதல்வனாக வைத்துக் கூறிய வேதமும் எனச் சிவ பெருமான் கூறிய வேதங்கள் இரண்டு எனவும், அவற்றுள் முன்னதை முனிவர் நால்வர்க்கும், பின்னதை உமையம்மைக்கும் கூறினான் எனவும் கூறப்படுவனவற்றுள், பின்னதாகிய வேதம் என்பார், திருக் கூத்தின் சீலாங்கவேதம் என்றார். அது சிவாகமம் என்பது வெளிப் படை. ஆகமமும், முதல்நூல் என்னும் பொருளில் வேதம் எனப்படுதல் அறிந்து கொள்க. சீலம் - இயல்பு. அங்கம் - வகை. நாயனார் வந்தது அகத்தியரைக் காணுதற்பொருட்டேயாயினும், திருவருட் செயல் இவ்வாறு இருந்தது என்பது இப் பாட்டின் கருத்து என்க.