
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

நுதலிய பொருள்
போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
English Meaning:
INTRODUCTIONI sing in praise of the greatness of Lord Shiva, who stands pure and resplendent, the husband of the Mother who bestows welfare upon the entire world, and the one who kicked Yama, the lord of the southern direction.
Tamil Meaning:
தூயவனாக விளங்கும் சிவபெருமான், உலகிற்கு நன்மை வழங்குபவளான பார்வதியின் கணவனும், தென்திசைக்கு தலைவனான யமனை உதைத்தவரும் ஆகிய உன்னதத்தின் பெருமையை யான் புகழ்ந்து பாடுவேன்.Special Remark:
போற்று, முதனிலைத் தொழிற்பெயர். போற்றுதல் - துதித்தல். `போற்றி` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தல் பெற்றது எனக் கொண்டு, `வணக்கம்` எனப்பொருள் கொள்ளலும் பொருந்தும். `போற்றிசைத்து` என்றதனை, `கூறுகின்றேன்` என்பதற்கு முன்னே வைத்து உரைக்க. `தூய உயிர்` என்றதற்கு, `இன்னுயிர்` என்றார். தயிரில் நெய்போல இறைவன் இனிது விளங்கி நிற்றல் சுத்தான்ம சைதன்னியத்திலே யாதல் அறிக. `நாற்றிசைக்கும்` என்றது, `உலகம் முழுவதற்கும்` என்றவாறாம். நன்மை, அருள். உலகத்தோடு இறைவ னுக்கு உளதாய தொடர்பு அவனது சத்தி வழியே ஆதலின், `நாற்றி சைக்கு நாதன்` என்னாது, `நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதன்` என்றார் `அளி யன்றித் தெறலும் அருளே` என்றற்கு `நல்ல` என்றும், `அவ்விரண் டனையும் செய்வது சத்தியே` என்றற்கு, `மாது` என்றும், `சத்தி, முதலன்று; முதலது பண்பே` என்றற்கு, `நாதன்` என்றும் கூறினார். `மாது` உயர்திணை ஆதலின், சாரியை வேண்டாதாயிற்று. மேல் திசை - மேற்சுட்டிய நான்கு திசைகள். `ஒரு வேந்தன்` என்றது, `திசைக்காவலர் எண்மருள் ஒருவன் என அவனது சிறப்பின்மை கூறியவாறு. கூற்றுதைத்தமையைக் கூறியது, மேல், `அவன்` எனப் பொதுப்படக் குறித்த முதற்கடவுளை, `சிவபெருமான்` எனச் சிறப்பு வகையால் விளக்குதற் பொருட்டு, சிறப்பாதற்கு `மாதுக்கு நாதன்` என்றதினும் இது வலி யுடைத்து என்க. முதற் கடவுளை முதற் கண்ணே சிறப்புப் பெயராற் கூறாது இலக்கணத்தாற் பொதுப்படக் கூறியது, `முதற்கடவுளாவான் இத்தன்மையனே, என்பது உணர்த்து முகத்தால், தாம் கூறும் சிவபெருமானையன்றி ஏனையோர் கூறும் கடவுளரை முதற்கடவுள் என்றல் ஒவ்வாமையை நிறுவுதற் பொருட்டாம். `புனிதன்` முதலியன ஆகுபெயராய் அவனது பெருமைமேல் நின்றன. எனவே, `இந்நூல் சிவபெருமானது பெருமையை உணர்த் தற்கு எழுந்தது` என்பது பெறப்பட்டது. `சிவபெருமானது பெருமையே யன்றி உயிர்களின் இயல்பு, அவைகளைப் பற்றியுள்ள பாசங்களின் இயல்பு என்பனவும் இதனுட் கூறப்படுகின்றன அல்லவோ, எனின், அவை அவனது அடிமையும், உடைமையுமே ஆதலின்` அவற்றது இயல்புகளும் அவனது பெருமையாய் அடங்கும் என்க./n`போற்றிசைத்துக் கூறுகின்றேன்` என்றதனால். வரையறை வகையால் கூறாமை பெறப்பட்டது. வரையறை வகையாற்கூறின், அளவு படாமையின் குன்றக் கூறலாய் முடியும்` என்பது கருத்து. `யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென்`1 எனப் பிறிதோரிடத்தும் கூறப்பட்டமை காண்க. இதனானே இந்நூல் தோத்திர வகையாகிய திருமுறைகளுள் ஒன்றாயிற்று./n
`கூறுகின்றேன்` என வாளா கூறின், `வரையறை வகையாற் கூறுகின்றார்` என்பதே படும் ஆதலின், அது படாமைப் பொருட்டு, `போற்றிசைத்து` என்றதனையும் உடன் கூறினார். ஆகவே, நுதலிய பொருளோடு அதனைக் கூறும் முறைமையும் இதனுள் பெறப்பட்டது. `கூறுகின்றேன்` எனத் துணிவுபற்றி எதிர்காலம் நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது./n
இதுவும், அடுத்த பாட்டும் நூற்சிறப்புக் கூறுகின்றன/n
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage