
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
English Meaning:
Guru`s Role in Soul`s IlluminationIt is but to see the Guru`s Holy Form,
It is but to chant the Guru`s Holy Name
It is but to hear the Guru`s Holy Word,
It is but to muse on the Guru`s Holy Being,
Thus it is the soul its illumination receives.
Tamil Meaning:
`பெத்தநிலை நீங்கும் பருவத்துச் சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான்` எனவும், `அத் திருவடி ஞானத்தைப் பெற்றபின் நிகழ்வன இவை` எனவும் முறைப்படக்கூறி முடித்தபின், அப்பேறு அனைத்தையும் வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தியில்லதோர் குற்றமாம் ஆதலின், அக்குற்றத் திற்கு ஆளாகாது என்றும் அக்குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.ஞான குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெய ராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.
Special Remark:
ஐய உணர்வும், திரிபுணர்வும் ஞானம் ஆகாமையின், மெய்யுணர்வை, ``தெளிவு`` என்றார். தெளிவு தருவனவற்றைத் தெளி வாகப் பாற்படுத்து ஓதினார். ஞானாசிரியரைச் சிவமாக உணராது நம்மனோருள் ஒருவனாக எண்ணுதல் ஆணவ மலச் சார்பினால் நிகழ்வதாகலின், அச்சார்புடையார்க்கு உண்மை ஞானம் விளங்க மாட்டாது என்பதனை ஈற்றில் நின்ற தேற்றேகாரத்தால் பெற வைத்தார். அதனால் மலம் நீங்கப் பெற்றார்க்கு இவை இயல்பால் நிகழும் என்பது பெற்றாம்.`உலகிற்கு ஆசிரியரும், அடைந்தவர்க்கு ஆசிரியரும், இருமை ஆசிரியரும்` என ஆசிரியர் முத்திறப்படுவர். அறம் முதலிய உறுதிப் பொருள் நான்கனுள் ஒன்றையாயினும், பலவற்றையாயினும் பற்றி முதலும், வழியும் ஆன நூல்களையாயினும், உரைகளையாயினும் செய்தோர் உலகிற்கு ஆசிரியர். இவர் திருவள்ளுவரும், ஞான சம்பந்தர் முதலிய சமயாசாரியர் நால்வரும் போல்பவர். இனி உறுதிப் பொருள்களை வரலாற்று முறையாற் கேட்டுணர்ந்து தம்மை அடைந்தவர்கட்கு அவற்றைக் கேட்பித்தல் சிந்திப்பித்தல்களைச் செய்விப்போர் அடைந்தவர்க்கு ஆசிரியர். இவர்களை, `தாதாரகுரு` என்பர். இவர் சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் போல்பவர். மேற்கூறிய இருதன்மையும் உடையோர் இருமை ஆசிரியர். இவர் மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர் போல்பவர். இம்மூவருள்ளும் சில குடியினர்க்குமட்டும் ஆசிரியராய்க் குலகுருவாய் நிற்பாரும் உளர்.
இவருள் உலகாசிரியர் தவிர ஏனையோருள் எழுத்தும், சொல்லும் அவற்றின் வடிவளவில் கற்பிப்பவர் `கணக்காயர்` எனப் படுவார். `உபாத்தியாயர், ஓதுவிப்பவர்` என்றெல்லாம் கூறுதல் இவரையே. பலவகைச் செய்யுட்களையும், நூல்களையும் பொருள் உணர்வு பெறக் கற்பிப்பவர் `கற்பிக்கும் ஆசிரியர்` எனப்படுவார். `வித்தியா குரு` என்றல் இவரையே. மணவினை, பிற்கடன் (உத்தர கிரியை, அந்தியேட்டி) முதலியவற்றை முன்னின்று செய்விப்பார், `பார்ப் பார்` எனவும், `ஐயர்` எனவும் சொல்லப்படுவர். இவருள்ளும் சிலகுடி யினர்க்கு மட்டும் உறுதி உணர்த்திக் குல குருமாராய் நிற்ப வரும் உளர் என்க. `புரோகிதர்` என்றல் இவரையேயாம். இவர், தெய்வங்கட்குச் சீற்றந்தணிவிக்கும் கடன் முறைகளையும் செய்வர் என அறிக.
சமய விசேட தீக்கைகளால் சிவவழிபாட்டினைப் பிறர்க்கு அளிப்பவர்களும், திருக்கோயில்களில் சிவனது திருமேனிகளை உலக நலத்தின் பொருட்டு வழிபடுகின்றவர்களும் `வழிபாட்டாசிரியர்` எனப்படுவர். `கிரியாகுரு` எனப்படுவார். இவரே. இனிச் சமய விசேட தீக்கைகளைப் பெற்றுச் சிவதன்மதத்திலும், சிவயோகத்திலும் பயின்ற தன் பயனாக மலபரிபாகம் வரப்பெற்றவர்க்கு அப் பரிபக்குவத்தை அறிந்து நோக்கம், பரிசம் முதலியவற்றால் பாசத்தை அறுத்தலாகிய நிருவாண தீக்கையின்வழிச் சிவனது திருவடி ஞானத்தை உணர்த் துவோர் `அருளாசிரியர்` எனப்படுவார். `ஞானகுரு` என்றும், `ஞானா சிரியர்` என்றும் சொல்லப்படுவார் இவரே. இங்குக் கூறப்பட்டு வந்த ஆசிரியன்மார்கள் அம்முறையானே ஒருவரில் ஒருவர் உயர்ந்தோர். அனைவரிலும் உயர்ந்தோர் அருளாசிரியாராகிய ஞானகுருவே. சிவன் ஆசானாய் நிற்றல் இந்த ஞானகுருவிடத்தேயாம். அதனால், `குருவேசிவன்` (தி.10 6ஆம் தந்திரம்) என்றற்கு முழுதுரிமை உடையவர் ஞானாசிரியரே.
``எழுத்தறிவித்தவன் இறைவனாகும்`` -நறுந்தொகை
``தெய்வத்தைப் போல மதிக்கிற்பான்``
-தொல். பாயிரம் உரை நச்சினார்க்கினயம்
என்றாற் போல ஏனை ஆசிரியன்மாரையும் இறைவனாகக் கூறுதல் முகமனுரையேயாம். அதனால், இத்திருமந்திரத்துள் ``குரு`` என்றது அனைவரிலும் மேலாய ஞானகுருவையே என்பது இனிது விளங்குதல் காண்க. இவரது சிறப்பினை இவ்வாறே,
ஞானயோ கக்கிரியா சரியை நான்கும்
நாதன்றன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி; கிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி
யானஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேஉரியன். ஆதலினால், யார்க்கும்
ஈனமிலா ஞானகுரு வேகுருவும். இவனே
ஈசனிவன் றானென்றும் இறைஞ்சி ஏத்தே.
எனச் சிவஞான சித்தி (சூ. 12,5) வகுத்துணர்த்தல் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage