
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.
English Meaning:
Pati (God), Pasu (Soul) and Pasa (Bondage) are EternalThey speak of the Three—Pati, Pasu and Pasa;
Beginningless as Pati, Pasu and Pasa are;
But the Pasu-Pasa nears not the Pati supreme:
Let but Pati touch! the Pasu-Pasa is as naught.
Tamil Meaning:
(பதி ஒன்றேயன்றோ என்றும் உள்ளது? ஏனைய பசு, பாசம் இரண்டும் எவ்வாறு தோன்றின? என்று ஐயுறும் மாணாக்கரைக் குறித்து,) `பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும்; அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது விட்டு நீங்கும். (என்று அருளிச்செய்தார்)Special Remark:
``அணுகின்`` என்றதனால், `அணுகுந் தன்மை உடையது` என்பதும், `அதனை உடையதாயினும், பாசப் பிணிப்பால் அணுகமாட்டாதாயிற்று` என்பதும், `அப்பிணிப்பு, கால எல்லையில் நெகிழுமாகலான் அங்ஙனம் நெகிழ்ந்தபொழுது பசு, பதியை அணுகும்` என்பதும் பெறப்பட்டன. பதி - கடவுள். பசு - உயிர். பாசம் - அவ்வுயிர்களைப் பிணித்துள்ள பொருள்கள். இவை மூன்றும் முறையே, `இறை, உயிர், தளை` எனத் தமிழிற் சொல்லப்படும்.இத் திருமந்திரம் ஒர் ஐயம் அறுத்தது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage