
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.
English Meaning:
He Granted Me Bliss SupremeHe made me see the truth that He pervades all.
Granted me the vision of the world that even Devas know not,
The vision of the Sacred Feet in Holy Sabha`s cosmic dance,
Granted me His infinite Grace and the Bliss supreme.
Tamil Meaning:
மேற்கூறிய நவயோகத்தை எங்கட்கு அளித் தருளிய நந்தி தேவராகிய சிவபெருமான், அப்பொழுதே உலக முழுதும் தான் ஒழிவற நிறைந்து நிற்கும் மெய்ம்மையையும், மாயோன் முதலிய புத்தேளிராலும் அறியப்படாத தனது சிவலோக நிலை யையும், திருமன்றுள் பேரின்ப நடனம் செய்தருளும் தனது எடுத்த திருவடியாகிய பற்றுக்கோட்டினையும், அப்பற்றுக் கோட்டினால் கிடைக்கின்ற அருளாகிய பேரின்ப வெளியையும் அளித்தருளினான்.Special Remark:
என்றது, `அச்சிவயோகத்தானே பராயோக அநுபவம், பதமுத்தி அநுபவம், சீவன்முத்தி அநுபவம், பரமுத்தி அநுபவம் ஆகிய அனைத்து அநுபவமும் உளவாயின` என்றவாறு. பராயோக அநுபவமாவது, அறிவு இச்சை செயல்கள் புறத்துப் பரவுங் கால் காண் பன பலவும் சிவமேயாய்த் தோன்றுதல். பத முத்தி அநுபவமாவது, அவ்விடத்து உளவாகும் சிற்றின்ப நுகர்ச்சிகளும் சிவபோமாகவே விளைவது. சீவன் முத்தி அநுபவமாவது, சிந்தனைக்கு எட்டாத சிவனைச் சிந்தனைக்கு எட்டுபவனாகக் கண்டு வழிபட்டு இன்புறும் அநுபவம். பரமுத்தி அநுபவமாவது, அறிவு இச்சை செயல் கட்குப் பிறிதொன்றும் புலனாகாது சிவமே புலனாக, அதன்கண் அழுந்தித் தன்னை இழந்து நிற்பது. இவையெல்லாம் இவ்வுடம்பு உள்ள பொழுதே பெறப்படுவனவே என்க. இவற்றைப் பெற்றோரே, `அணைந்தோர்` எனப்படுவர். அணைந்தோர் - சிவனது திருவடி நிழலை அணைந்தவர். இவர், `சீவன் முத்தர்` என வடமொழியிற் சொல்லப்படுவார்.``பெற்றசிற் றின்பமே பேரின்பமாய் அங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற`` -திருவுந்தியார் - 332
எனவும்,
``உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத் தாக்கில்`` -திருக்களிற்றுப்படியார். 76
எனவும்,
``காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனக்
காணும் அடியார்`` -தி.8 திருவாசகம். பண்டாய. 6
எனவும் வருவனவற்றால் இவையெல்லாம் இவ்வுடம்புள்ளபொழுது தானே பெறத்தக்கனவாதல் அறிக.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
என்ற திருக்குறள் -359 இச்சிவயோக, சிவபோக நிலைகளையே கூறுவது என்பதை,
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் என்றமையால்
சார்புணர்தல்தானே தியானமுமாம்; - சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.
என்று கூறும் திருக்களிற்றுப்படி நூல். இதனால், மேல் தொகுத்துக் கூறப்பட்ட பயனை வகுத்துக் கூறியவாறாதல் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage