
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
English Meaning:
At His Glance, Impurities VanishThe sunstone sleeps in cotton enclosed,
The sunstone burns not the fragile stuff;
Let but the sun`s rays fall! How it shrivels and flames!
Even so the impure wilts before the Lord`s cathartic glance.
Tamil Meaning:
`பதியினைப்போல் அனாதியே` என மேல் விளக்கப்பட்ட பசுக்களும், பாசங்களும் முறையே சூரியகாந்தக் கற் களும், அவற்றை மூடியுள்ள பஞ்சும் போல்வனவாம். அவற்றுள், சூரிய காந்தக் கற்கள் தனியே நிற்கும் பொழுது தம்மை மூடியுள்ள பஞ்சு களைச் சுடமாட்டா. அது போலப் பசுக்கள் தனியே நின்று தம்மைப் பிணித்துள்ள பாசங்களை நீக்கமாட்டா. ஆயினும், அச்சூரிய காந்தக் கற்கள் சூரியன் வந்தபொழுது அதன் கிரணத்தைப் பெற்றுத் தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்குமாறுபோல, சிவன் ஞானாசிரிய னாய் வந்த பொழுது பசுக்கள் அக்குருவின் அருளைப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசங்களை அகன்றொழியச் செய்யும்.Special Remark:
``அவ்`` என்பது வகர ஈற்றுச் சுட்டுப் பெயர். `அவை` என்பது இதன் பொருள். இது, மேல், ``பசு, பாசம்`` என்பவற்றைச் சுட்டி, அவற்றை நிரல்நிறை வகையால் சூரிய காந்தத்திற்கும், சூழ் பஞ்சிற்கும் உவமிக்கப்படும் பொருளாக்கி நின்றது. `போலவே` என்பது பாடம் ஆகாமை அறிக. சூரியன் சந்நிதியில் சுடுதற்கு உப மேயம் கூறிய அதனால், தனியே நின்று சுடாமைக்கு உபமேயம் கொள்ளப்பட்டது. ஆரியன் - ஆசிரியன். ``சுட்டிடா`` எனவும், ``சுடும்`` எனவும் பொது உணர்வே பற்றிக் கூறினாராயினும், உண்மை உணர்வு பற்றி, `சுடுந்தன்மையைப் பெறா` எனவும், `பெறும்` எனவும் கூறுதலே கருத் தாதலின், உவமைக்கேற்ப, `அகற்றும் மலங்களே` என்னாது ``அற்ற மலங்களே`` என்றார். இதனால், `ஆன்ம அறிவு தன்னியல்பில் நின்று பாசத்தை நீக்குவதன்று; சிவனது அறிவைப் பெற்று அவ்வறிவாய் நின்றே நீக்கும்` என்பது உணர்த்தப்பட்டதாம். ``வேயின் எழுங்கனல் போலே`` என மேற்கூறியவாற்றால், `விறகில் உள்ள தீ வெளிப்படுதற்கு அதனைக் கடைவோன் நிமித்தமாம் அளவே யல்லது, அதனிடத்து தீயைப் புகுத்துவோனாகாமைபோல, மாணாக் கனது அறிவின்கண் உள்ள சிவஞானம் வெளிப்பட்டுத் தோன்றுதற்கு ஞானாசிரியன் நிமித்தமாதலல்லது, அதனை அவனறிவின்கண் புகுத்துவானல்லன்` என்றற்கு, `சூரியன் சந்நிதியில்` என உவமைக் கண்ணும், ``ஆரியன் தோற்ற`` எனப் பொருட் கண்ணும் கூறினார்.``சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்``
-சிவஞானசித்தி. சூ. 8. 28
என இதனை அருணந்தி சிவாசாரியர் இனிது விளக்கினமை காண்க. ``அற்ற`` என்றது முற்று. ``சுட்டிடா`` என்ற பன்மையால் உயிர்கள் பலவாதல் குறிக்கப்பட்டது.
இதனால் சிவஞானம் உண்டாதல் ஞானாசிரியனது வருகை இன்றி யமையாமை சிறந்ததோர் உவமத்தால் விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage