
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
English Meaning:
Silence of Waveless ThoughtLike the ghee subtly latent in purest milk,
Into the waveless Thought the Lord in silence speaks;
They who, in silence realise, this mortal coil shuffled
Purity they become, in Limitless Light mingling.
Tamil Meaning:
குற்றம் அற்ற பாலில் உள்ள நெய் அப் பாலினுள் வேற்றுமையின்றிக் கலந்து நிற்றல்போல, ஞானாசிரியன் அறிவுறுத்த சொல்லை அலைவற்ற உள்ளத்தில் வேற்றுமை அற்றுக் கலந்து நிற்குமாறு உணர்ந்து அப் பொருளில் அழுந்திநிற்பவர், தம் உடம்பு இங்கு வீழ்ந்த பின்னர் அவரது ஆன்மாத் தன் இயற்கை வியாபகத்தைப் பெற்று, என்றும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்ற மெய்ப்பொருளேயாய் விடும்.Special Remark:
`குற்றம்` என்றது வேற்றுப் பொருளாகிய பிரையை. பாலில் பிரை சேருமாயின், அஃது அதனைத் திரித்து அதன்கண் உள்ள நெய்யை வேறாகச் செய்யுமாதலின் அதனைப் ``புரை`` என்றார். உரை அறுதலாவது, சொல்லாய் வேறு நில்லாது பொருளாய் உணர்வோடு ஒன்றுதல்; என்றது அநுபூதி நிலையை. எனவே, `ஆசிரியனது அருண்மொழியை, கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்னும் அளவிற் கொண்டொழியாது, நிட்டை நிலையில் அநுபவமாகக் கைவரப் பெற்றவர், உடம்பு நீங்கியபின் சிவனோடு இரண்டறக் கலத்தலாகிய சாயுச்ச பரமுத்தியை எய்துவர்` என்றவாறாம். `கரையற்ற சோதியாய்` என்றார், பின்வரும் பொருட்குத் தோற்றுவாயாதற்கு. ஆக்கச்சொல் தொகுத்தல். சத்து - மெய்ப்பொருள்; சிவம். இக்கலப்பு முன்பே உள்ளதன்றிப் புதுவதன்றாகலின், `அஃது இயற்கையாய் விடும்` என்றற்கு, ``கலந்த சத்தாமே`` என்றார். ``அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே`` (சிவஞானபோதம் சூ.8) என்றார் மெய்கண்டதேவரும்.இதனால், இவ்வுலகில் அதீதத்தைப் பெற்றோர் பின்னர் எய்தும் பயன் கூறப்பட்டது.
``காயம்ஒழிந் தால்சுத்த னாகி ... ...
... ... ... ... ... ...
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீழ் இருப்பன்
மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே`` 2
எனச் சிவஞான சித்தியினும் (சூ. 11.1) இவ்வாறே கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage