
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.
English Meaning:
When the Five Senses Take Cit`s Way, They Reach CitWhen the five senses commencing with sound, retrace their evolution
Where shall the consciousness merge but in the cosmic mind?
When one light merges in another there will be only light,
Understand this crystal clear.
Tamil Meaning:
சடமாகிய சத்தம் முதலிய தன்மாத்திரைகள் முதலாக உள்ள கருவிகள் யாவும், சடமாகிய தத்தம் காரணத்துள்ளே சென்று சேர்ந்துவிடுமாயின் அதன்பின் சித்தாகிய ஆன்மாவிற்குச் சித்தாகிய சிவத்தையன்றிச் சாருமிடம் வேறுண்டோ? இல்லை. அதனால் அந்நிலையில் அப் பயனைத் தரக் கருதியே குருவாய் வந்து ஆண்டுகொண்ட திருவருளாகிய வெள்ளத்தின் செயலால், தூய பரவெளியில் விளங்கும் சிவமென்னும் ஞாயிறாகிய பேரொளியிடத்து ஆன்மா என்னும் விண்மீனாகிய சிற்றொளி சென்று சேர்ந்து ஒன்றாய்விடும்.Special Remark:
பின்னர் `சித்திற்குச் சித்து இடம்` என்பது வருதலால், முன்னர், `சடத்திற்குச் சடம் இடம்` என்பது பெறப்பட்டது. `ஒரு பொருள் தன்னினப் பொருளொடு சேர்தலன்றி, வேற்றினப் பொருளொடு சேராதாயினும், சித்தாகிய ஆன்மா, சடமாகிய தத்துவங் களோடு சேர்ந்திருந்தமை, மதுவுண்டவனுக்கு அம்மயக்கத்தால் உள தாகும் தலைதடுமாற்றம் போல, ஆணவ மலமாகிய குற்றச் சார்பினால் உளதாயது` என்பதும், `அக்குற்றம் நீங்கவே, ஆன்மா அம் மயக்கம் நீங்கப் பெற்றுச் சிவத்தை அடையும்` என்பதும் உணர்த்துதற் பொருட்டுச் சடத்திற்குச் சடமும், சித்திற்குச் சித்துமே இடமாதலைக் குறித்தார். இன்னும், ``சுடரில் சுடர்சேரும்`` என்றதும் அதுபற்றி. இதனால், உயிருக்கு உலகை நோக்கிச் செல்லுதல் செயற்கையும், சிவத்தை நோக்கிச் செல்லுதல் இயற்கையும் ஆதல் பெறப்பட்டது. இச் செயற்கை இயற்கைகளை,சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம்
சிறைசெய் புலன்உணர்வின் தீர்ந்து - சிறைவிட்
டலைகடலிற் சென்றடங்கும் ஆறுபோல் மீளா
துலைவில்அரன் பாதத்தை உற்று.
என (சிவஞானபோதம் சூ.8) விளக்கினார் மெய்கண்ட தேவர்.
தூநிழல் ஆர் தற்காருஞ் சொல்லார் தொகும்இதுபோல்
தானதுவாய் நிற்கும் தரம். -திருவருட்பயன் 61
என்னும் திருவருட்பயனும் ஆன்மாவிற்குச் சிவத்தைச் சார்தலே இயற்கை என்பதை விளக்கிற்று.
`இருபொருள் ஒன்றாதல் எவ்வாறு` என்பார்க்கு விளக்கமாக, ``சுடரில் சுடர் சேரும்`` என்றார். சுடரில் சுடர் சேர்தல், நீரில் நீர் சேர்தல் போல, ஒருபொருள்தானே பிற பொருளது இடையீட்டால் இரண்டாய் நின்று, அவ்விடையீடு நீங்கியபின் முன்போல ஒன்றாதலாகிய ஐக்கியம் அல்லாமை உணர்க. சுடரில் சுடர் சேர்ந்தவழியும் சேர்ந்தது பொருளால் வேறேயாய் நிற்குமாற்றை,
``வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல`` -சிவஞானபோதம் சூ.8
என விளக்கினார் மெய்கண்டதேவர். இவ்வுண்மை அறியாதார், `உடம்பு நீங்கியவழி ஆன்மா சிவத்தொடு சேர்ந்து ஒன்றாதல், குடம் உடைந்தவழி, அக்குடத்தினுள் நின்ற ஆகாயம், புறத்து நின்ற ஆகாயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போலும்` எனத் தமக்குத் தோன்றியவாறே உரைப்பர். தத்துவங்களுள் ஒடுக்க முறையில் முன் நிற்பன மாபூதங்களே யாயினும், தன்மாத்திரைகளையே முதலாகக் கூறினார். அவை அவற்றிற்கு முதலாய் அவை ஒடுங்கும் இடமாதல் பற்றியும், நிலம் நீர் முதலிய பூதங்கள் ஒன்றின் ஒன்று ஒடுங்கும் என்றல் சிவாகம நெறியாகாமை பற்றியும் என்க. உருவகமாய் வந்த அப்பு, ஆகு பெயராய் நின்றது. அருளையுடையோன் செயலை அருளின் செயலாகவே கூறினார். ``அப்பில்`` என்பதில் இல், ஏதுப் பொருட் டாகிய ஐந்தாம் உருபு.
இதனால், `மேற்கூறியவாறு கரையற்ற சோதி கலந்த சத்தாமாறு இது` எனச் சிவசாயுச்ச பரமுத்தியில் ஆன்மா நிற்கும் நிலை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage