
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
English Meaning:
Lord`s Feet are the Final Refuge of Souls IlluminedThe Holy Feet is Siva, if you but know,
The Holy Feet is Siva`s world, if you but think,
The Holy Feet is Freedom`s bliss, realize,
There is the final refuge for souls illumed.
Tamil Meaning:
உண்மை நூல்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் சொல்லப்பட்ட பொருள்களைச் சிந்தித்து அறுதியிட்டுச் சொல்லு மிடத்து, மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் ஒருதலையாக உணர்ந்து பற்ற வேண்டுவோர்க்குச் சிவபெருமானது திருவடி ஒன்றே பரம் பொருளும், வீட்டுலகமும், துறக்க உலகங்களுமாகும். ஆதலின், அதனைத்தவிர உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை.Special Remark:
என்றது, `மிகப்பெரியோனாகிய சிவபெருமானது பேராற்றலுள் ஒரு சிறு கூறுதானே எண்ணில்லாத உயிர்கட்கும் எல்லா மாய் நின்று பயன்தரும்` என்றவாறு. இதனானே, சத்தியைத் திருவடி யாகக்கொண்டு, `அத்திருவடி தானே எல்லாம் செய்ய வல்லது` என வும், `உயிர்கட்கு வீடுபேறாய் நிற்பது அத்திருவடி நிழலே` எனவும் கூறுதல் மரபாயிற்று என்பதும் உணர்ந்து கொள்ளப்படும். சத்தியே திரு வடி எனவே, `ஞானசத்தி, கிரியாசத்தி` என்பனவே இரண்டு திருவடி களாதல் உணரப்படும். இச்சை இவ்விரண்டினும் விரவிநிற்பதாம்.கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -குறள் 2
என்பது முதலாகத் திருவள்ளுவ நாயனாரும் திருவடியையே பலவிடத்தும் கூறினார். திருநாவுக்கரசர், `திருவடித் திருவிருத்தங்கள், திருவடித்திருத்தாண்டகங்கள்` என்பவற்றால் திருவடிகளின் பெருமையைப் பலபட விரித்தருளிச் செய்தார். மாணிக்கவாசகர் தி.8 திருவெம்பாவையின் இறுதித் திருப்பாட்டில் திருவடியே எல்லாமாய் நின்று ஐந்தொழில் செய்வனவாக அருளிச்செய்தார். இன்னும் திருமுறைகளில் யாண்டும் திருவடிப் பெருமையே பேசப்படுதல் வெளிப்படை. இவ்வாற்றால், `யாவரும், யாவர்க்கும் சிவபெரு மானது திருவடியே பற்றாதல் உணர்ந்து அதனைப் பற்றி வாழ்தல் வேண்டும்` என்பது பெறப்பட்டது.
இதனால் திருவடியது சிறப்புக் கூறும் முகத்தால் சிவனது சிறப்பு வகுத்துணர்த்தப்பட்டது. இதனானே சிவநெறிக்குப் பொருளாவது யாண்டும் சிவனது திருவடியே என்பதும் முடித்துக் கூறப் பட்டதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage