
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.
English Meaning:
As Atom Merges in the Vast, Jiva Merges in SivaThe tiny atom, swimming in the Universe vast,
Merges in the Vast–no separate existence knows;
So the Spirit abiding in each body
At sight of His Holy Feet, discovers its Ancient Home.
Tamil Meaning:
எல்லாப்பொருளும் அடங்கி நிற்கும் இடமாகிய `அண்டம்` என்னும் பேருருண்டையுள் அணு என்னும் சிறியதோர் உருண்டை அடங்கி நிற்பதல்லது, அதற்குப் புறம்பாய் வேறோ ரிடத்தில் நிற்றல் இல்லை. அதுபோலப் பலவகை உடம்புகளை எடுத்து அவற்றின் அளவாய் நிற்கின்ற சிற்றுயிர்களுக்குப் பிறவிக் கடலி னின்றும் நீங்கி அலமராது நிலைத்து நிற்கும் கரையை அடைவதாயின் அக்கரை, என்றும் அலமரல் இல்லாது ஒருபெற்றியே நிற்பவனாகிய சிவபெருமானது திருவடியே. இதுவன்றி வேறு கரை உண்டோ?Special Remark:
அண்டம் - உருண்டை; ``அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்``(தி.8 திருவண்டப்பகுதி.1) என்றார் மணிவாசகரும். `இடங்கொண்ட தன்றி வேறில்லை` எனச் சில சொல் வருவித்து உரைக்க. ``இதுவன்றி உண்டோ`` என்பதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. கடம் - குடம். அஃது உவமையாகு பெயராய், உடம்பைக் குறித்தது.இதனால், சிவம் பெரிய பொருளாதலும், உயிர் அதனிற் சிறிய பொருளாதலும் உணர்த்தி, மேற்கூறியவாறு சீவன் சிவத்துள் அடங்குமாறு கூறப்பட்டது. `திடம்பெற நின்றானே` என்று ஒழியாது `அவன் திருவடிதானே` என்றதும், சிவனது பெருமைக்கண் சீவன் சிறியதோர் அளவில் அடங்கும் என்றற்காம். இதனானே, உயிர்கட்குப் பயன் தருபவன் இறைவன் என்னாது, அவனது அடியே என நூல்கள் கூறுவதன் உண்மையும் விளங்கும். இன்னும் சித்தாந்த முத்தி, `அடிசேர் முத்தி அல்லது அருள்சேர் முத்தி` எனப்படுமாறும் இதனானே விளக்கப்பட்டதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage