
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

விட்டபின் கற்பவுற் பத்தி விதியிலே
தொட்டுறுங் கால்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள்சா நாள்குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதென்றெண்ணுயும் பார்க்கவே.
English Meaning:
Determine the Results of the ActHaving emitted,
Examine the laws of conception
The time of union, of pregnancy and delivery
The baby`s length of life, and death;
Its character, good and bad,
These you in detail determine.
Tamil Meaning:
ஆடவன் பெண்டினிடத்து விந்துவை விட்டபின் கலவிக் காலத்துச் சரவோட்டம் முதலியவை பற்றி அவ்விந்து கருவாகித் தோன்றும் முறையில் அதன் தொடக்கம் முதலியவை களையும், பின்பு அதன் வாழ்நாள் சாநாள்களையும், பின்பு அதன் இழி குணம், உயர்குணம் என்பவற்றையும் `தனித்தனி இவ்வியல்பினது` என்று ஆராய்ந்தறிதலையும் செய்வானாக.Special Remark:
`அவை யாவும் நல்லனவாய் அமைதலும் ஒரு வகை விந்து சயமும் அவை தீயனவாதலும் ஒரு வகை விந்து அப செயமும் ஆம்` என்பது கருத்து. எனவே, யோகி தனது யோக வன்மையால் அவற்றையெல்லாம் நல்லனவாகச் செய்வான்` என்பதாம். ``காலங்கள்`` என்றது கரு முற்றும் பத்துத் திங்களை. ஒவ்வொரு திங்களிலும் புறத்தே ஒவ்வொரு சடங்கு செய்தலும் கருமேற்கூறிய எல்லா வகையிலும் நன்மையை எய்துதற் பொருட்டேயாம். ``வாழ் நாள் சாநாள்`` எனப் பட்டன, கரு வயிற்றிலிருக்குங் காலமாகிய பத்துத் திங்களுக் குள்ளேயும் அமைவனவாம். காலத்தில் நிகழ்வனவற்றை, ``காலங்கள்`` என்றார். தோன்றுதல் - ஆராய்பவனுக்குப் புலனாதல். ``தோன்ற`` என்னும் செயவெனச்சம். ``தோன்றியபின்`` என இறந்த காலப் பொருட்டாய் நின்றது. ``கருதிய, கட்டிய`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `வாழ்நாள், சாநாள்` என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்தன. ``கருவிற்பட்ட உயிரினது வினையை நோக்கிக் கட்டிய` என்றவாறு. கட்டுதல் - நியமித்தல், கருவிற் பட்ட உயிருக்கு அக்கருவில் தானே அஃது அடைதற்குரிய அனைத்தும் அமைக்கப்படுதல் என்பதை,``பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்க டென்னும் ஆறும்முன் கருவுட் பட்டது``
-சிவஞான சித்தியார் - சூ. 2. 9.
என்பதனானும் அறிக. கருதுதல், கட்டுதல் ஆகிய வினைகட்கு `பால் வரை தெய்வம்` என்னும் வினைமுதல் வருவிக்க. ``எண்ணியும்`` என்னும் உம்மை சிறப்பும்மை, அதனால் அஃது அங்ஙனம் எண்ணிப் பார்க்க வல்லாரை நோக்கிக் கூறியதாயிற்று. ஆகவே, `சர ஓட்டம் முதலியவற்றை அறிய வல்லார்க்கு இங்குக் கூறியவெல்லாம் புலனாகும்` என்பது விளங்கும்.
இதனால், கலவி செய்வோர் அக்காலத்து மேற்கொள்ளும் முறை முறையின்மையால் மக்கள் நல்லராயும், தீயராயும் - வாழ்நாள் மிக்கராயும், குறைந்தவராயும் தோன்றுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage