
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி யிருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.
English Meaning:
The Yogis See LordThe Lord is my master,
He is Rudra, Fire and Light
He mounts the Bull in splendour surpassing;
Ye who have not seen Him,
Away, from Here!
The Sadhakas have seen Him
He is the support of their heart.
Tamil Meaning:
எல்லாப் பொருள்களையும் அடிமையும், உடை மையுமாக உடையவனும், அக்கினியைச் சிறப்பு வடிவமாகக் கொண்டவனும், `உருத்திர மூர்த்தி` எனப்படுபவனும், இடப வாகனத்தை ஊர்பவனும் ஆகிய சிவன் இனிது விளங்கியிருக்கும் இடமே, மேற்கூறிய அக நோக்குடையவர் சென்று சேரும் இடமாகும். ஆகவே, அவ்விடத்திற் சென்று சிவனை நேர்படக் கண்டவர்களே உள்ளமாகிய வாயில் வாயிலாகப் பயன்படப் பெற்ற சாதகராவர்.Special Remark:
`விடை ஏறியாகிய அவன்` என மாற்றிக் கொள்க. கடை - இடம், போதல், இங்குச் சேர்தலைக் குறித்தது. ``போயிடும்`` என்பது இங்குச் செயப்பாட்டு வினையாய் ``கடை`` என்றதற்கு முடிபாயிற்று. அறிவை `நெஞ்சம், உள்ளம்` முதலியனவாகக் கூறுதல் வழக்கு. தடை - வாயில். அதுவாதல் - வாயிலாகவே நின்று பயன்தருதல். `நெஞ்சத்து அடையதுவாகிய` எனப் பிரித்தல் மோனை நயத்திற்கு ஏலாமையும், ``அடை`` என்பதற்கு `அடயோகம்` எனப் பொருளுரைத்தலும், `அடயோகமே சிவனை விளங்கக் காணுதற்குச் சாதகம்` என்றலும் ஒவ்வாமையும் அறிந்துகொள்க.இதனால், அருட்சத்தி விளக்கத்திற்கு உரியவர் ஆயினோர், பின் சிவப்பேறாகிய முடிந்தபயனைப் பெறுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage