
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
பதிகங்கள்

நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.
English Meaning:
Parasakti Evolves into Jnana and IchchaParasakti, who with pervasive Para stood,
Becomes Jnana Sakti and Ichcha Sakti;
And when Kriya Sakti arrives, (from Bindu)
The Dancer immanent becomes in them all.
Tamil Meaning:
`முத்திக்கு மூலமாய் உயிர்களிடத்தில் நிற்பாள்`` என மேற்கூறப்பட்ட அந்த அருட் சத்தியே முன்பு, உயிர்களை உய் விக்க விரும்பும் சிவனுடனே அந்த விருப்ப ஆற்றலாயும், பின், உயிர் களை உய்விக்கும் வழிகளை அறிகின்ற அறிவாற்றலாயும் நிற்பாள். (அப்பொழுதெல்லாம் சிவன் விரும்பியும், அறிந்து நிற்பதன்றிச் செயலில் ஈடுபடுதல் இல்லை.) பின்பு, அவள் நல்லவளாக அறியப் படுகின்ற கிரியா சத்தியாய் நின்ற பொழுதே, சிவன் அம் மூன்று சத்திக ளோடும் கூடிநின்று எல்லாச் செயலையும் செய்கின்றவனாவான்.Special Remark:
நீள் பரன் - தன்னிலையினின்றும் உயிர்களை உய் விக்கும் நிலைக்குச் செல்லும் சிவன். இங்ஙனம் செல்லும் நிலையே `ஆதி சிவன்` என்னும் நிலையாகும். எனவே, இந் நிலையில் அவனது சத்தியும் `ஆதி சத்தி` எனப்படுவாள் என்பது விளங்கும். `திரோதான சத்தி, திரோதானகரி, திரோதாயி` என்னும் பெயர்களால் குறிக்கப் படுபவளும் இந்த ஆதி சத்தியே. இவளே, `இச்சை, ஞானம், கிரியை` என முதற்கண் மூன்றாய் நின்று, பின், பற்பல காரணங்கள் பற்றிப் பல்வேறு வகையாய், அளவிறந்து நிற்பாள். ஆதிக்கு முன் உள்ள நிலை அநாதி. அந்நிலையில் சிவனும், சத்தியும் முறையே `பரசிவன்` என்றும், `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர்.மன்றன் - மன்றில் (சபையில்) நிற்பவன் என்றது. `ஐந் தொழில் செய்து நிற்பவன்` என்றதாம். செயலே உயிர்களால் அறியப் படுதலின், அதனையே ``நன்றறி கிரியா சத்தி`` என்றார். `நன்றாக, கிரியா சத்தியாய், மன்றனாய்` என்னும் ஆக்கச் சொற்கள் தொகுத் தலாயின. ``மன்றனாய் அவற்றுள் மருவிடும்`` என்றாராயினும், `அவற்றுள் மருவி மன்றனாயிடும்` என்பதே கருத்தாதல் அறிக.
இதனால், அருட்சத்தியே முதற்கண் ஆதிசத்தியாய் இறைவனது செயல்கள் எல்லாவற்றிற்கும் நீங்காத் துணையாய் நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage