
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

ஒன்றிரண் டாடஓர் ஒன்றும் உடனாட
ஒன்றினில் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினா லாடஓர் ஒன்ப துடனாட
மன்றினில் ஆடினான் மாணிக்கத் கூத்தே.
English Meaning:
The Dance of RubyHe danced as One, alone
He danced as Two, with Sakti
He danced as several, all life in;
He danced in Three, Sun, Moon and Fire;
He danced in Seven, the worlds that are;
He danced on one Foot;
He danced in Saktis Nine;
He danced in arena that is Space;
He danced the Dance of Ruby.
Tamil Meaning:
ஒன்று முதலாவது; சிவதத்துவம், இரண்டு இரண்டாவது; சத்தி தத்துவம், ஓர் ஒன்று, சத்தி தத்துவத்தின்பின் அடுத்தடுத்து நிற்கின்ற ஒன்றும், ஒன்றும்; சாதாக்கிய தத்துவமும், ஈசுர தத்துவமும். ஒன்றினில் மூன்று. ஈசுர தத்துவத்தை அடுத்துள்ள சுத்த வித்தியா தத்துவத்தில் `அரன், அரி, அயன்` என்பவரது அதிட்டானங் களாகிய மூன்று. ஓர் ஏழு, இந்த ஏழும். ஒன்பது, இவற்றுடன் இவற்றிற் கெல்லாம் மேலே உள்ள நாத விந்துக்கள் கூடிய அனைத்துத் தத்து வங்களும். ஒன்றினால் ஆட - அவை அனைத்தும் அங்ஙனம் ஆடல் மூர்த்தமாகிய ஒன்றினாலே ஆடும்படி இறைவன் மன்றினில் மாணிக்கக் கூத்து ஆடினான்.Special Remark:
``ஒன்பது உடனாட`` என்பதை, ``ஒன்றினால் ஆட`` என்றதற்கு முன்னே கூட்டுக. `இறைவன்` என்பது தோன்றா எழு வாயாய் நின்றது. மாணிக்கக் கூத்து - மாணிக்கம் போல வரம்பறிய லாகாத தாண்டவம். ஒன்பது தத்துவங்களும் ஆடுதல், (செயற்படுதல்) சம்புபட்சமாயாதல், அணுபட்சமாயாதல் அவ்வப்பெயர் பெற்று நிற்கும் முதல்வராகலாம் ஆதலின், ``ஆட, ஆட`` என வந்தன பலவும் அவர்கள் ஆடலின் வழியாடலேயாம் என்க. எனவே, அனைத்து முதல்வர்களது ஆடற்கும் இவ் ஒரு மூர்த்தத்தின் ஆடலே முதலாதல் அறியப்படும். `மாகேசுர மூர்த்தங்களில் ஒன்றாக எண்ணப்பட்ட வடிவத்தையுடைய கூத்தப்பிரானின் வேறாய்ச் சிவதத்துவத்தில் இலய நிலையில் நிற்கும் கூத்தப் பிரான் ஒருவர் உளர்` என மகுடாகமம் கூறுகின்றது.தத்பரம் சிவதத்வம் ச பூஜயேத் ஞான மூர்திகம்
ஸர்வகாரண தேவேசம் த்யாத்வா தாண்டவ மீச்வரம்
ஆவாஹயேத் ததோ தேவம் புஷ்பஹஸ்தம் ஸுகாஸந:
இவர் இருக்கும் இடமே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட பரம வியோமம் என்பதும், பிருகதாரணியத்தில் சொல்லப்பட்ட இருதய ஆகாசம் என்பதுமாம் எனவும், இதுவே தமிழில் திருச்சிற்றம்பலம் எனப்படுகின்றது எனவும் இதனால், மேற்கூறிய இடங்களில் முறையே `பிரபஞ்ச அத்தியட்சகர்` என்றும்; `ஈசானர்` என்றும் சொல்லப் பட்டவர் சிவதத்துவத் தாண்டவேசுரரே எனவும் கொள்ளப் படுகின்றன. ஆதலால், இங்கு ``மன்று`` (திருச்சிற்றம்பலம்) எனப் பட்டது பரமவியோமமும் அதன்கண் ஆடுவார் சிவதத்துவத் தாண்டவேசுரரும் எனவே கொள்க. ``அருமறைச் சிரத்தின் மேலாம் - சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம்`` 1 என்ற சேக்கிழார் வாக்கும் இங்கு நினைவுகூரத்தக்கது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage