
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

கூத்தே சிவாய நமமசி யாயிடும்
கூத்தே, ஈஊ ஆ ஏஓசி வாய நமஆயிடும்
கூத்தேஇ, உஅஎ ஒசி வயநம வாயிடும்
கூத்தேஈ, ஊஆஏ ஓநமசி வாயகோள் ஒன்றுமே.
English Meaning:
Dance Vowels Become Five Letter MantraThe Dance Si Va Ya Na Ma
The Dance Letters I,U,A,E and O (m) become Sivaya Nama
The Dance-Letters I, U, A, E and O (m) become Si Va Ya Nama
The Dance-Letters I, U, A, E and O (m) become Namasivaya, the goal supreme.
Tamil Meaning:
மேற்கூறிய இருவகை நடனங்களுள் ஞான நடனம், `சிவாயநம` என்பதனாலேயும் அமையும். அம் மந்திரம் இவ்வாறு தனியாக உச்சரிக்கப் படுதலேயன்றி ஈம், ஊம், ஆம், ஏம், ஓம் என்னும் வித்தெழுத்துக்களுள் ஒன்றேனும் பலவேனும் கூட்டியும் உச்சரிக்கப்படலாம். இனி, மேற்கூறிய அவ்வெழுத்துக்கள் நெடிலாய் இல்லாமல் குறிலாய் நிற்கவும் கொண்டு உச்சரித்தற்கு உரியன. `சிவாய நம` என்னும் சூக்கும பஞ்சாக்கரமே நகாரம் முதலாய தூல பஞ்சாக்கரமாய் நிற்குமாதலின் அது ஊன நடனத்திற்கு உரியதாய் மேற்கூறியவாறே வித்துக்களைக் கூட்டாதும், கூட்டியும் உச்சரிக்கப் படும்.Special Remark:
தேற்றேகாரங்களைப் பிரித்துத் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பின்னர்க் கூட்டிப் பொருள் கொள்க. ஏற்புழிக் கோடலால் ஈற்றில் உள்ள கூத்து ஊன நடனமாகவும் ஏனைய மூன்றும் ஞான நடனமாகவும் கொள்ள நிற்றல் அறிக. கூறியது கூறலாகவும், பின்னர்த் திருவைந்தெழுத்துக் குறிலாக வருவதனோடு இயையாதனவாகவும் மூன்றாம் அடியிலும் உயிரெழுத்துக்களை நெட்டெழுத்தாக ஓதுதலும், நான்காம் அடியில் முதல் உயிரைக் குற்றெழுத்தாக ஓதுதலும் பாடம் ஆகாமை அறிந்து கொள்க. `சிவாயநம` என்பதைத் திரும்பத் திரும்ப ஓதினால் மகாரம் சிகராத்தோடு புணரும் நிலை உண்டாகும், உண்டாயினும் அதனால் தீங்கில்லை என்றற்கு `மசி` என்பதையும் முதலடிக்கண் கூறினார். `வாயிடும்` என்பது பாடம் அன்று.திருவைந்தெழுத்தைப் பீசங்களோடு கூட்டாதது `நிர்ப்பீசம்` என்றும், கூட்டுவது `சபீசம்` என்றும் சொல்லப்படும். சபீசம் உயர்ந் தோர்க்கே உரியன; நிர்ப்பீசம் பிறர்க்கும் உரியன. இப் பீசங்களை மேலை மந்திரத்திற் கூறிய முறையாற் கூறாது வேறுபட ஓதினார், அவை திருவைந்தெழுத்தோடு கூட்டப்படுங்கால் முன்னவை இரண்டினும் பார்க்கப் பின்னவை மூன்றும் திருவைந்தெழுத்தோடு இயையக் கூட்டுதல் பெரும்பான்மை என்பது உணர்த்துதற்கு. உகார ஊகாரங்கள் `ஔ` என்னும் நெட்டெழுத்தாய்ப் பரிணமிக்கின், அதுவும் பெரும்பான்மையதாம் என்க. கோள் ஒன்றும் - பீசங்களைத் திருவைந்தெழுத்துக் கொள்ளுதளைப் பொருந்தும். முதலடி ஒழிந்த அடிகளில் ``கூத்தே`` என்பன கூனாகி நின்றன.
இதனால், திருவைந்தெழுத்தைச் சபீசமாகக் கூறும் முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage