
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தால்உம் மேல்
சூக்கும மான வழிஇடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதா னந்தமே.
English Meaning:
Chant Sivaya Nama and Enjoy Bliss of SivaIt is the Sukshma (Subtle) mantra;
Chant it eight thousand times;
You shall see the (Sushumna) Path Subtle,
You may enjoy the bliss of Siva
That is subtlest of all.
Tamil Meaning:
மறைவாகச் சொல்லப்படும் மொழியாகிய மேற் சொன்ன மந்திரத்தை இடைவிடாது செபித்தால் உங்கள் தலைமேல் உள்ள நுண்ணிய வழியை அச் செபத்திற்கு இடையே காணுதல் கூடும். அதனால், முன்னே முகந்து கொண்டதனால் நுண்ணியதாய்ப் பொருந்தி நிற்கின்ற பிராரத்த வினையையும் அழிக்க இயலும். அதனை அழிக்கவே, உயிரிடத்து விளைவதாகிய சிவானந்தம் வெளிப்படும்.Special Remark:
வழி, பிரமரந்திரம். இது ஆதார யோகத் தினின்றும் நிராதாரத்திற்குச் செல்லும் வழியாதல் பற்றி ``வழி`` எனப் பட்டது. சஞ்சிதம் ஞானிகட்கு முன்பே கெடுக்கப்பட்டமையானும், யோகி யர்க்கு இனி வேறோராற்றால் கெடுக்கப்படுமாகலானும் இங்கு ``வினை`` என்றது பிராரத்தத்தையே. அது முகந்துகொள்ளப்பட்ட நிலையில் சூக்குமமாய் நின்று, பயன் தருங்கால் தூலமாய் வந்து பொருந்தும். ஆதலின், ``சூக்குமமான வினை`` என்றார். இம் மந்திரம் ஞானியர்க்கும், யோகியர்க்கும் பொதுப்பட ஓதப்பட்டமையின், `வழி காணுதல், வினையைக் கெடுத்தல்` என்பவற்றை உடனே வீடுபெற விரும்புவார்க்கு, தலையைப் பிளந்துகொண்டு உடலை விட்டு நீங்கும் வழியாகவும், பிராரத்தத்தை நசிக்கச் செய்தலாகவும், சீவன் முத்தர்க்கும், யோகியர்க்கும் முறையே ஆதார யோகத்திலிருந்து நிராதார யோகத்திற் செல்லும் வழியாகவும், பிராரத்தத்தை மெலி வித்து உடல்ஊழாய் ஒழியவும், யோகத்தைத் தடுக்காது நீங்கவும் செய் தலாகவும் விளக்க. சிவானந்த வெளிப்பாடும் முறையே பரமுத்தி யிலும் சீவன் முத்தியிலும், யோக சமாதியிலும் நிகழ் வனவாகவும் கொள்க.இதனால், மேற்கூறிய வழிபாடு வீட்டு நெறி நிற்பார்க்கும் உதவுவதாதல் சிறந்தெடுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage