
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 1. அசபை
பதிகங்கள்

சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவாள் நயந்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமந் தானே.
English Meaning:
Chant Sivaya Nama and Attain SiddhisYou may easily transmigrate into any body;
The goodly Sakti will your companion be;
If you chant the mantra,
The fiery snake of Pasa will leave you;
That mantra is the secret of the Holy Dance,
Chant it unceasingly.
Tamil Meaning:
(இம்மந்திரம் இருபொருள் கொள்ள நிற்பது) ஓர் உரை:- தான் நிற்கும் உடல் துன்பம் உடையதாயும், மற்றோர் உடம்பு இன்பம் உடையதாயும் எவ்வகையாலேனும் தோன்றினால் நிற்கும் உடம்பை விட்டுத் தான்விரும்பிய வேறோர் உடம்பில் புகுந்து இன்புறலாம்; இல்லறத்தில் நிற்க விரும்பினால் நல்ல மனையாள், தன்னை விரும்பி விரைவில் வந்து அடைவாள்; மாணிக்கத்தைக் கொண்டு விளங்கும் கொடிய நாகமும் தான் சொல்லிய அளவில் கட்டுண்டு அகலும். மேற்சொல்லிய திரு வம்பலச் சக்கரத்து வழிபாட்டின் மறைபொருள் (இரகசியம்) இது.Special Remark:
``ஒரு கூடு`` என்பதை எடுத்தல் ஓசையாற் கூறி இப்பொருள் காண்க. இப்பயனுக்கு எடுத்துக்காட்டாக இந் நாயனாரையே கொள்ளலாம். `மனம் சொல்லும் ஒரு கூடு` என்க. ``பாசம்`` என்பது `கட்டு` என்னும் பொருளதாய் `கட்டுட்பட்டு` எனப் பொருள் தந்துநின்றது. சுடர், ஆகுபெயர். ``திருக்கூத்து`` என்றது தானியாகு பெயராய் அது நிகழும் இடத்தின்மேல் நின்று, இடஇயை பால் மேற்குறித்த சக்கரத்தைக் குறித்தது. சூக்குமம் - மறைப் பொருள்.மற்றோர் உரை:- சிறப்பித்துச் சொல்லப்படும் திருவருளாகிய அவ்வுறைக்குள்ளே தனது சீவபோதமாகிய வாள் புகுந்து அடங்கி நிற்றலால், சிவானந்தத்தைத் துய்க்கலாம். அப்பயன் உண்டாகும்படி திரோதான சத்தி நீங்க அருட்சத்தி தன்னை விரும்பி வந்து விரைவில் தன்னிடத்தில் பதியும். திருவைந் தெழுத்தை ஓதுதலானே கொடிய நாகம் போல்வதாகிய ஆணவம் வாதனையும் கெட்டுப் பற்றறக் கழியும். (நான்காம் அடிக்கு மேற்கூறியவாறே உரைக்க.)
இங்கு, ``கூடு`` என்றதை, ``கூட்டில் வாள் சார்த்தி நின்றுந் தீபற`` என்னும் திருவுந்தியார் (30) பகுதியொடு வைத்து உணர்க. தனது போதம் புகுதலை ஒற்றுமை பற்றித் தானே புகுதலாகக் கூறினார். அருட்சத்தி என்பது விளங்குதற்கே, ``நல்ல மடாவள்`` என்றார். பாசப் பாம்பு, உருவகம். இவ்விருவகைப் பயனையும் அவரவர் தகுதிக்கு ஏற்பக் கொள்க.
இதனால், மேற்கூறிய வழிபாடு புத்தி, முத்தி இரண்டனையும் தருவதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage