
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால்
நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.
English Meaning:
Beyond Jiva Turiya and Para Turiya is Siva TuriyaIn the Vedanta-Siddhanta Way
Beyond Siva aspects in Param and in Jiva
Arises the Jnana
In Pure State of Experience (Turiyatita)
That verily is Siva State ultimate
Only those who in Tapes stood
Realized Siva Truth (Tattva)
Tamil Meaning:
சிவனை ஈசுரனிடத்திலும், சீவனிடத்திலும் வைத்துக் காட்டுவது வேதாந்தம். அதில் இருவகை உண்டு. ஒன்று பரிணாம வாதம்; மற்றொன்று ஆபாசவாதம். ஆபாசம் - போலி. விவர்த்தனம் ஆபாசத்துள் அடங்கும். விவர்த்தனம் - கயிறு பாம் பாதல் போலும் பொய்த்தோற்றம். `நிர்க்குணமாகிய பரப்பிரமமே தன் இச்சையால், சத்துவகுணனாகிய ஈசுரனாகவும், இராசத குண னாகிய சீவனும், தாமத குணத்தவாகிய அந்தக் கரணம் முதலிய கருவி களுமாய்ப் பரிணமிக்கும்` என்பது பரிணாம வாதம். `நிர்க் குணமாகிய பரப்பிரமத்திலே - இன்னது எனச்சொல்ல இயலாத - மாயை என்பது உண்டு. அது முக்குணங்களை யுடையது. மூன்றுநிறம் உடைய கண்ணாடியைப் போன்றது. அம்மூன்றுகூற்றிலும் கண்ணாடி -யில் நிழல் போலப் பரப்பிரமம் பிரதிபலிக்கும். அவற்றுள் சத்துவக் கூற்றின் பிரதி பலனம் ஈசுரனாயும், இராரசதக் கூற்றின் பிரதிபலனம் சீவனாயும், தாமதக் கூற்றின் பிரதி பலனம் அந்தக் கரணம் முதலிய கருவிகளாயும் நின்று செயற்படும்` என்பது ஆபாசவாதம். இந்த ஆபாசத்திற்கு அடிப்படை மாயையே யாகையால், ஆபாசவாதமே `மாயாவாதம்` எனப்படுகின்றது எவ்வகை யிலேனும் இந்தவேதாந்தம் `சகம், சிவன், பரம்` என்னும் முப் பொருளை உணர்த்துதலால், இதனை உணர்ந்த பின் ஆகமாந்தத்தை உணருங்கால், வேதாந்தக் கூற்று தூலாருந்ததி முறைமைத்தாதல் விளங்கும். தூலாருந்ததி முறைமை யாவது, `அருந்ததி மீன் மிக நுண்ணி தாதலின், அதனைக் காட்டுதல் அரிது` என்று கருதி முதற்கண், அதற்கு அருகில் உள்ள ஒரு பெரு மீனைச் சுட்டி, `அதுவே அருந்ததி` எனக் காட்டுதல் போன்ற முறை. முதலில் அப்பெருமீனைக் கண்டுணர்ந் தவனுக்குப் பின்பு, `அஃதன்று அருந்ததி மீன்; அதனைச் சார்ந்து மிக நுண்ணியதாய் விளங்குகின்றதனைப் பார்; அதுவே அருந்ததி மீன்` எனக்காட்டினால், அவன் அருந்ததியைக் கண்டுகொள்வான். இம் முறையில் அருந்ததி யல்லாத மீனை அணுக்கம் பற்றி `அருந்ததி` என்றல் போல்வது இங்குக் கூறிய வேதாந்தப் பொருள். அருந்ததி மீனையே சுட்டி, `அருந்ததி மீன்` எனக் காட்டுதல் போல்வது ஆகமாந்தப்பொருள். ஆகவே, தூலாருந்ததி முறைமை பற்றி நோக்கினால் இங்குக் கூறிய வேதாந்தமும் பயனில்லது ஆகா தாகலின், இந்த வேதாந்தமும் சித்தாந்தமேயாம். இவ்வாறு ஆகும் நிலைமையில் ஒருவனது ஞானம் அமையுமாயின், அந்த ஞானம் தசகாரியத்துள் ஒன்பதாம் நிலையாகிய `சிவயோகம்` எனப்படுகின்ற சீவன் சிவனாய் நிற்கும் நிலைமையைத் தரும். `சரியை, கிரியை, யோகம்` என்றும் தவங்களின் மிகுதியனாலே இத்தகைய ஞானத்தை எய்தினோரே, `தத்துவ ஞானிகள்` எனப்படுகின்றார்கள்.Special Remark:
`பரப்பிரமத்தை` என்னாது, ``சிவனை`` என்றது, `சித்தாந்தத்தில் சொல்லப்படும் சிவனே, வேதாந்தத்தில் சொல்லப் படும் பரப்பிரமம்` என்றற்கு. இச்சிவன், சொரூப சிவன் என்க. இஃதே பற்றித் தடத்த சிவனை, `வேதாந்திகள் கூறும் ஈசுரன்` என்றோ, `சகுணப் பிரமம்` என்றோ மயங்கற்க. சித்தாந்தம் கூறும் தடத்த சிவனும் நிர்க்குணனே. பரமன் - வேதாந்திகள் கூறும் பரமன்; ஈசுரன். ``நவம்`` என்றது, ஒன்பதாம் எண்ணுமுறைமையை. `உற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மிக்கு - மிகுந்ததனால். உணர்தற்கு, `இதனை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.இதனால், `சித்தாந்தமே வேதாந்தம்` என்னும் உண்மையை உணராதவர் வேதாந்த வாக்கியங்கட்குத் தாம் தாம் அறிந்தவாற்றால் கூறும் பொருள்களும் சித்தாந்தத்தை உணர்ந்தவர்கட்கு நேர் மாறானவை யாகாது, தூலாருந்ததி முறைமையவாம் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage