
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேரச் சிவோகமாய்
ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.
English Meaning:
Essences of Vedanta and Siddhanta``I am the Supreme One,`` says Vedanta,
``I shall become the Supreme One,`` says Siddhanta;
In Turiya State they realize the Self,
And in Siva Yoga they unite in Parapare Sweet;
Rid of Malas
They the Rare Goal attain.
Tamil Meaning:
பிறிதொரு நூலால் அன்றித் தன்னாலேதான் பிரமாண மாகின்ற வேதத்தின் முடிவுதான் எக்காலத்தும் சிவாகமங் களின் முடிவு. அவ்விரண்டிலும் கூறப்படுவது, நின்மலாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளுள் சிவனின் நீங்கி நில்லாத துரியாவத்தையில் ஆன்மா, தன்னை முதற்கண் உள்ளவாறுணர்ந்து, தேன்போல இனிக் -கின்ற பரம்பொருளை அடைதற்கு வழியாகிய சிவோகம் பாவனையில் நின்று, அதனானே அனாதிதொட்டு நீங்காது பற்றி வருகின்ற மலம் முற்றும் நீங்கப்பெற்று, பெறுதற்கரிய பேற்றைப் பெறுதலேயாம்.Special Remark:
``தான்`` இரண்டில் முதற்கண்ணதில், `தானே` என்னும் ஏகாரம் தொகுக்கப்பட்டது. ஓடு, எண்ணிடைச் சொல். பின்னது தேற்றப் பொருளில் வந்த இடைச்சொல். `முடிந்த முடிபு` எனப் பொருள் தருவ தாகிய `சித்தாந்தம்` என்பது சிறப்புப் பற்றிச் சிவாகமாந்தத்திற்கே காரண இடுகுறிப் பெயராய் வழங்குகின்றது. எனவே, மேல் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறிய `சித்தாந்தம்` என்பதும் இதுவே யாதல் அறிக.இனி, `வேதாந்தம்` என்பதும் காரணப் பெயராய் உப நிடதங்களையும், காரண இடுகுறிப் பெயராய்ப் பிரமசூத்திரத்தையும் குறிக்கும். எனினும் சித்தாந்த சைவத்தில் எங்கும் `வேதாந்தம்` என்பது உபநிடதங்களையன்றிப் பிரமசூத்திரத்தையன்று. `பிரமசூத்திரம் ஏகான்ம வாதநூல்` - என்பதே சித்தாந்த சைவத்தின் முடிவு என்பதைச் சர்வான்ம சம்பு சிவாசாரியார் செய்த சித்தாந்தப் பிரகாசிகையாலும் சிவஞான மாபாடியத்தில் சிறப்புப் பாயிரத்து, `சைவாகமப் பிராமணியம்` கூறும் பகுதியாலும், அவையடக்கத்தில் `ஏகான்ம வாதம்` கூறும் பகுதியாலும் அறிக.
`வேதாந்தமே சித்தாந்தம்` - என்பதைப் பின்னரும் நாயனார் விளக்குதல் காண்க. ``அச்சிவோகம்`` என்ற அகரச்சுட்டு. வேதாகமங் களில் சொல்லப்படுதலைச் சுட்டிற்று. இறுதியில், `இவற்றின் முடிவு` என்பது இசையெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `வேதாந்தமும், சித்தாந்தமும் முடிவால் வேறல்ல` என்பது கூறப்பட்டது. `அங்ஙனமாயின் இரண்டாகக் கூறுவானேன்` என்னும் வினாவிற்கு விடை, பின்வரும் ``வேதமோடாகமம்`` என்னும் மந்திரத்திற் காணலாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage