
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி
பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே
கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.
English Meaning:
Transcendental Nature of SivaTranscending Universe Seven
And the Beyond
Is the Great Light;
Lord is Light of that Light,
Of yore, He with Parasakti stood;
There He stands lofty, all by Himself,
He, Our Lord
Tamil Meaning:
`உலகங்கள் அனைத்தையும் கடந்தாலும் அவற்றிற்கு அப்பாலும் ஒருபேரொளி உள்ளது` என வேதாகமங்கள் கூறுகின்றன. அந்தப் பேரொளிக்குள்ளே உள்ள ஓர் ஒளிதான் எங்கள் சிவபெருமான். அவன் அந்தப்பேரொளியைத் தனக்கு இயல்பாய் உள்ள மேலான ஆற்றலாக உடையவன். எனினும் அந்த ஆற்றலை ஆட்சி செய்கின்ற ஒருவனாகவும் அவன் அதற்குள் இருக்கின்றான்.Special Remark:
அண்டம், இங்கு `உலகம்` என்னும் பொருட்டாய் நின்றது. `உலகங்கள் ஏழு` என்னும் மரபு பற்றி, `ஏழு` எனப்பட்டது. ``கடந்தகன்று`` என்பது ஒருபொருட்பன்மொழி. ``அப்பாலும்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம் இதனால் அண்டங்களுக் -குள்ளேயும் அந்த ஒளி இருத்தல் பெறப்பட்டது. ``என்ற`` என்னும் அனுவாதத்தால், என்றலும் பெறப்பட்டது. ``உள ஒளி`` என்பது குறிப்பு வினைப்பெயரெச்சத் தொடர். ``பண்டு`` என்றது `அனாதி` என்றபடி. `ஆற்றல் யாவும் பொருளைப்பற்றியே நிற்கும் ஆதலால், இந்த ஆற்றலுக்குப்பற்றுக்கோடாய் உள்ளவனே எங்கள் பெருமான்` என்றார். `அன்றி நின்றான்` என்றது, `அந்த ஆற்றலாகிய குணத்திற்கு வேறாய், அதனையுடைய குணியாய் நிற்கின்றான்` என்றதாம்.`பரம்பொருள் அறிவு மட்டுமான குணமேயன்றி, அறிவையுடைய குணியன்று` என்பர் ஏகான்மவாதிகள். `அது சித்தாந்தம் அன்று` என்பதை இம்மந்திரத்தால் கூறினார்.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``8
என்றார் உமாபதி தேவர். சிவன் வெறும் சத்தியன்று; `சத்தியையுடைய சத்திமான்` என்க. எந்த ஒரு சத்தியும் தன்னையுடைய பொருள் இன்றித் தனியேயிராது.
``... ... ... ... ... சத்திதான் சத்தனுக்கோர்
சத்தியாம்; சத்தன்வேண்டிற் றெல்லாமாம் சத்தி தானே``l
என்ற சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், ஆறந்தங்களுள் மேலானதாய சித்தாந்தத்தின் சிறப்புப்பொருள் ஒன்று எடுத்துக்கூறப்பட்டது.
``அண்டம் ஆரிருள் ஊடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``3
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage