
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
பதிகங்கள்

கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப
அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில்
வரும்சம யம்புறம் மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.
English Meaning:
The Truth of Vedanta-Siddhanta is the Truth of AgamasTo each according to his understanding
The Lord reveals Truth of His Agamas;
Beyond and penetrating
The Prakriti Maya (impure) ant Mamaya (pure-impure)
—Is the doctrinal Truth of Vedanta-Siddhanta.
Tamil Meaning:
கொள்வார் கொள்ளும் வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிவன் உலகில் பலவகைச் சமய நூல்களை ஆக்கி வைத்திருக் -கின்றான். (அவை ஒன்றோடொன்று முரணுதல் போலத் தோன்றுதல், அவற்றைக் கொள்வாரது பக்குவத்திற்கு ஏற்ப அவை அமைந்ததனாலேதான். அதனால் அவற்றைக் கொள்வோர் தமக்கு விருப்பமானவற்றைக் கொண்டு அமைதல் வேண்டுமன்றிப் பிறருக்கு விருப்பமானவற்றைப் பழித்தல் கூடாது. ஏனெனில் எல்லா நூல்களும் இறைவன் அருளால் தோன்றியவையேயாகலின்) அந்நூல்களின் வழி அமைந்த சமயங்களில் சில, `புறம்` எனப்படும். மாயை, மகாமாயை இவற்றைக் கொண்டுள்ள சமயங்கள் அகச்சமயங்களாம். அவற்றையும் கடந்து நிற்பன வேதாந்த சித்தாந்தத் தத்துவங்கள்.Special Remark:
`ஆகமங்களில் சிவாகமங்களே சித்தாந்தம், என்றல், அவை முற்றறிவுடைய சிவனால் செய்யப்பட்டமையாலேயாம். எந்தச் செயலும் சிவன் தான் நேரே செய்யவும், பிறரைக் கொண்டு செய்விக்கவும் நிகழ்வதேயன்றி, அவை தாமாக நிகழ்வன அல்ல ஆகலின், சமய நூல்கள் பலவும் காரணக் குறிபற்றிச் சிவாகமமேயாம்.``துணை நன்மலர் தூய்த்தொழும் தொண்டர்காள், சொல்லீர்;
பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி
இணையில் இரும் பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டே. இன்னும்,
``விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்``
என்றதும் கொள்பவரது பக்குவ வேறுபாடுகளை நோக்கியதேயாம்.
`உயிர்கள் பக்குவம் எய்தியபொழுதே இறைவன் குருவாகி வருவான்` என்பதை, ``அரும்பருவம் அடைதலுமே ஆசானாகித் தோன்றி``l என முன்னர்க்கூறிய சிவஞானசித்தி, பின்னர், `அவ்வரும் பருவம் எப்பொழுது வரும் என வினாவுவார்க்கு,
``புறச்சமய நெறிநின்றும், அகச்சமயம் புக்கும்
புகல்மிருதி வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம
அறத்துறைகள் அவையடைந்தும், அருந்தவங்கள்புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும், ஆரணநூல் படித்தும்,
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால், சைவத்
திறத்தடைவர்``8
எனப் பின்னர்க் கூறிற்று. இதனால் அனைத்துச் சமயநூல்களையும் அவற்றைக் கொள்வாரது பக்குவத்தை நோக்கின் வேண்டத்தக்கனவே யாதல் அறிக.
`சாருவாகம் முதல் எல்லாச்சமயமும் பரமசிவனால் செய்யப் பட்டமையின் பிரமாணமேயாயினும் ... ... சோபான முறையான் உபதேசித்தருளியது - என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப் படும்`` (கிறப்புப்பாயிரம் - `சைவாகமப்பிராமணியம்` எனச்சிவஞான மாபாடியத்தில் உரைக்கப்பட்டமையும் காண்க.
பக்குவம் நோக்கிச் செய்யப்பட்டமையால், `உலகம் மாயை மகாமாயைகளினின்று பரமசிவனால் தோற்றி ஒடுக்கப்படும்` என்பதை உணரமாட்டாதார்க்கு அது சொல்லப்படவில்லை அதனால், சாருவாகர், (உலகாயதர்) `பூதம் நான்கே; அவை கூடுதலும் பிரிதலும் இயற்கை. கூடுவதால், உலகமும், உடம்புகளும் தோன்றும்; பிரிவதால் அழியும். நான்கு பூதங்களும் கூடியபொழுது அறிவும் தோன்றும்; பிரியும்பொழுது அறிவும் அழியும்; ஆயினும், உடம்பு உள்ளவரையில் உலகில் நீதி கடைப்பிடிக்கப்படவேண்டும்; இல்லையேல் வாழ்வு நல்வாழ்வாக அமையாது` என்பர். ஆயினும் நீதியைக் கடைபிடிக்காத பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
சமணரும், பௌத்தரும், `உலகம் தானே தோன்றியழியும்` என்பர். அவருள் சமணர், `அறம் - என்பது ஒன்று உண்டு, அதன் வழியிலேதான் உலகம் நடைபெற்று வருகின்றது` - என்பர். ஆகவே, அறத்தைக் கடைப்பிபிடிக்காது வழுவி விடும் பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்;
பௌத்தர், `மனிதர் பரதுக்க துக்கராய் வாழவேண்டும்; அஃதாவது, பிறர்க்காயினும், பிறஉயிருக்காயினும் துன்பம்வரின், அத்துன்பத்தைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி அத்துன்பத்தைக் களையவும், துன்பம் வராமல் காக்கவும் வேண்டும்; இதுவே தவம். இத்தவத்தால் ஞானம் பிறக்கும்; ஞானத்தால் வீடு உளதாம்` என்பர். எனவே, இத்தவத்தினின்றும் வழுவும்பொழுது அவர்கள்தங்கள் மதத்தை அவர்கள் கைவிட்டவராகின்றனர்.
இவரெல்லாம் வேதசிவாகமங்களை இகழ்தலால் புறத்திலும் புறப்புறச்சமயிகள் ஆகின்றனர். வைதிகருள் மீமாஞ்சகரும், சாங்கியரும் நிரீச்சுரவாதிகள். அவருள் மீமாஞ்சகர், ஈசுரன் இல்லாவிடினும் இருப்பதாக வைத்து வேதத்தில் சொல்லப்படுகின்ற வேள்வி முதலிய கருமங்களைச் செய்தல் வேண்டும்; செய்தால் அந்தக் கருமங்களே பயனைக்கொடுக்கும். கருமங்களை விட்டவன் வழியை விட்டுக் குழியில் வீழ்ந்தவன் ஆவான்; அவனுக்கு உய்தியில்லை என்பர். எனவே, அவர் கருமங்களின் வழுவும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆவர்.
சாங்கியர், `உலகமே மயக்கத்தைத் தருவது, சாங்கிய நூலின் வழியே தத்துவ ஆராய்ச்சியில் முதிர்ந்து நிற்றல் வேண்டும். அவ்வாறு நின்றால் மயக்கம் நீங்கும்` என்பர். ஆகவே, அவர் தத்துவ ஆராய்ச்சி செய்யாது, வாழ்க்கை நடத்தப் புகும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர்.
நியாய வைசேடிகர்களும், `ஈசுரன் ஒருவன் உண்டு` எனக் கூறினாராயினும், உய்யும் வழி கூறுவதில் சாங்கியரை ஒத்திருக் கின்றனர்.
யோக மதத்தினர், `யோகத்தின் எட்டுறுப்புக்களாகிய இயமம், நியமம் முதலியவற்றை முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டும்` என்பர். முற்றாகக் கடைப்பிடித்தோர் எவரும் இலர்.
ஏகான்மவாதிகள், `உலகம் கனவு போன்றதே; என்றாலும், அதைக்கனவாகக் கண்டு கழித்து, பரமார்த்தத்தின் விழிக்கின்ற வரையில் உலகில் உள்ள எல்லா நீதி அநீதிகளையும் உணர்ந்து, தீவழி நீக்கி, நல்வழியில் ஒழுகவேண்டும்` என்பர். எனவே, அவர் அவ்வாறு ஒழுகாதபொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
`பாஞ்சராத்திரம்` எனப்படுகின்ற வைணவ மதத்தினர், பெரும்பான்மையும் சைவரோடு ஒத்திருப்பினும் சைவத்தின் உயிர்க் கொள்கையாகிய, `பிறப்பு இறப்பு உடையன எல்லாம் உயிர்களே; எக்காரணத்தாலும் அவையில்லாதவனே கடவுள்` என்பதை மறுத்து, `உயிர்களின் பொருட்டுக் கடவுள் பிறந்தும் வருகின்றான்` என்பர். பிறப்பாவது அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சார்யுசம் என்னும் நால்வகை யோனிகளுள் எந்த ஒன்றிலேனும் கருவாய் இருந்து தோன்றி, வளர்ந்து, சிலகாலம் வாழ்ந்து மறைதலாம். இதனை `அவதாரம்` என்றல் உபசாரமே. உண்மையில் அவதார மாவது, கடவுள் எவையேனும் சில காரியங்களை முன்னிட்டு யாதானும் ஓர் உருவில் தோன்றிச் சில நொடிகளில் அக்காரியத்தை முடித்து மறைவதேயாகும். பிறப்பு எய்திய வர்களையே இவர்கள் கடவுளாகக் கூறினாலும், `அவர்களையும், கடவுளையும் வழிபட்டு உய்யவேண்டும்` என்பர். மேலும், `அற நெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும், அறநெறிக்கு எதிரான மறநெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும் தரும் ஆதலின் அற நெறியிலே ஒழுகவேண்டும்` என்றும் கூறுவர். இக் கொள்கை சைவத்திலும் உள்ளதே. `உலகிற்கு அறநெறியை அருளியவன் கடவுளே` எனக் கொள்வதால் அறநெறியில் ஒழுகுவதும் கடவுள் வழி பாட்டின் ஒரு பகுதியேயாகின்றது. எனவே, வைணவரும், சைவரும் அறநெறியையும், இறைவழிபாட்டினையும் விடுவாராயின் தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர். மீமாஞ்சகர் முதல் பாஞ்சாரத்திரம் முடிய உள்ள மதத்தினர் வேதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் வேத சாரமாகிய சைவாகமங்களை ஏற்றுக்கொள்ளாமல் இகழ்தலால் இவர்களுடைய சமயங்கள் `புறச்சமயங்கள்` எனப்படுகின்றன.
இனிப் பாசுபதம் முதலிய தாந்திரிகர்கள், இறையுண்மை கொண்டபோதிலும் வேதத்திற்கு மாறான ஒழுக்கங்களை `நல்லொழுக்கம்` எனக்கொள்ளுதலாலும், `ஆன்றோர் யாவரும் வேத ஒழுக்கமே நல்லொழுக்கம்; அவற்றிற்கு மாறானவை தீயொழுக்கம்` எனக்கொண்டமையாலும் இவர்களது சமயங்கள் `அகப்புறச் சமயங்கள்` எனக்கூறப்படுகின்றன. சிவாகமங்களை இவர்கள் முழுமையாகக் கொள்ளாவிடினும் ஓரளவு தழுவுவர். அதனால் இவர்களது சமயம் அறவே, `புறச்சமயம்` எனப்படவில்லை.
புறப்புறச் சமயிகள் `மாயை` என்றை ஒன்றைக் கொள்வதே யில்லை. அதிலிருந்து அவர்களுடைய தத்துவங்கள் எவ்வளவு முரண் பட்டவை என்பது விளங்கும். புறச்சமயிகள் வைதிகர்களாயினும் மாயையை மட்டும் கொண்டு, மகாமாயையைக் கொள்வதில்லை. அதனால் அவர்களுடைய தத்துவங்களும் நிறைவுடையன ஆகாமை விளங்கும்.
இவைகளையெல்லாம் நோக்கும்பொழுது சமயவாதிகளது பக்குவநிலை விளங்கும். விளங்கவே இறைவன் எல்லாரிடத்தும் ஒப்பவே கருணையுடையவன் ஆகையால், சமயநூலை ஒன்றாகச் செய்யாது பலவாகச் செய்தும், செய்வித்தும் உள்ளான் என்பதை இம்மந்திரம் விளக்குகின்றது.
`ஆகமம்` எனத் தொகையால் ஒன்றாகிப் பின் வகை விரிகளால் பலவாதல் பற்றில் ``தன்னில்`` என ஒருமையால் கூறப்பட்டது. ``புறம்`` என்பதில் முக்கூற்றுப் புறங்களும் அடங்கின. `வரும் சமயமே புறமும்` என ஏகாரமும், உம்மையும் விரிக்க. `அதனால் அவை இகழற்பால அல்ல` என்பதாம். உருவிய உண்மை `வேதாந்த சித்தாந்த உண்மை` என்க. ``உருவிய`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பன்மை வினைப்பெயர்.
இதனால், `ஆறந்தங்களில் மேற்பட்டவை வேதாந்தமும், சித்தாந்தமும்` என்பது பரந்த நோக்கத்தில் வைத்து விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage