
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.
English Meaning:
In Turiyatita State Tattvas Remain Behind In BodyWhen the Earthly King, that is Jiva,
Mounting the steeds swift (of consciousness),
At the Lovely City (of Turiyatita) arrives,
The Senses Five
And Tattvas rest that remained behind,
But slept in the body,
That vibrant once was.
Tamil Meaning:
இம்மந்திரம் ஒட்டணியாய் நின்று பொருளைத் தருகின்றது. படி - நாடு; என்றது புற உலகத்தை. அதனை இறைவன் ஆணையால் தனதாகக் கொண்டு இன்பத்துன்பங்களை எய்திவரும் உயிரையே, `உடை மன்னவன்` என்றார். வடிவு - பல உள்ளமைப் புக்கள். மாநகர் - கோநகர்; என்றது உடம்பை. வருதல் - உலாவருதல். என்றது, எல்லா இடங்களிலும் வியாபித்து, எல்லாப் புலன்களையும் உணர்ந்தும் அவற்றிற்கு ஏற்ற எல்லாச் செயல்களையும் செய்தும் வரும் சாக்கிராவத்தையை. அடியுடை ஐவர் - அணுக்கமாய் நிற்கும் அமைச்சர்கள். என்றது, ஞானேந்திரியங்கள் ஐந்தையும், அவற்றால் உணரப்படும் பொருள்கள் அந்தக்கரணங்களாலே தெளிவுபடும் ஆதலின், அந்த அந்தக்கரணங்களும் `ஐவர்` என்றதிலே அடங்கின. அங்கு உறைவோர் - அமைச்சர்களுக்குக் கீழாய் அரசனது உலாவில் பலவகைப் பணிகளையும் செய்துநிற்கும் பல பணியாளர்கள் என்றது பிறகருவிகளை. இம்முறையை, `கால்கொடுத்து இருகை மூட்டி` என்னும் ஞானாமிர்த அகவலிலும் காண்க. (அகவல் - 9) இச்சாக்கிர நிலை, ``படைகொடு பவனிபோதும் பார் மன்னன்`` எனச் சித்தியாரிலும் கூறப்பட்டது. (சுபக். சூ. 4)Special Remark:
`மன்னன் உலா வரும்போது அங்கு உறைவோர் துயின்றனர்` என்றதனால், `துயின்றது, அவன் அந்தப்புரத்தில் சென்றபொழுது` என்பது போந்தது. அந்தப்புரமாவது மூலாதாரம். அந்தப்புரத்தில் அரசன் தன் மனையாளைத் தழுவிக் கிடத்தல், உயிர் மூலப்பிர கிருதியைப் பற்றி அதனை யொழித்துப் பிறிதொன்றையும் அறியாது கிடத்தல். இது சகலத்தில் கேவல துரியாதீத நிலையாகும். `சகலத்தில் சகல சாக்கிரம் ஆன்மாவின் அறிவு முற்றாகவும், தீவிரமாகவும் செயற் படும் நிலை எனவும் சகலத்தின் கேவல துரியாதீதம் ஆன்மாவின் அறிவு சிறிதும் செயற்படாது மூடமாய்க் கிடக்கும் நிலை எனவும் உணர்க. முற்றாகவும் தீவிரமாகவும் செயற்படும் நிலைக்கு அரசன் குதிரைமீது ஏறி நகர்வலம் வருவதையும், சிறிதும் செயற்படாது மூடமாய்க் கிடக்கும் நிலைக்கு அரசன் அந்தப்புரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்து கிடத்தலையும் நூல்களில் உவமையாகக் கூறுதல் மரபாக உள்ளது. இல்லம் - அவரவருக்கு உரிய இடம். `அவற்றை அடைதற்கு அவர்கள் துடிப்பர்` என்க. `அரசன் உலாவரும்பொழுது அமைச்சர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகச் செயற்படுதல்போலச் சகலத்தில் சகல சாக்கிரத்தில் அனைத்துக் கருவிகளும் நன்கு செயற்படும்` எனவும், `அரசன் அந்தப்புரத்தில் சென்று உறங்கிவிட்டபொழுது தனி யொரு காவலாளியுங்கூட உறங்கிவிடுதல்போல, உயிருக்குக் காவ லாகிய பிராண வாயுவுங் கூட இயங்காது` எனவும் கொள்க. சாக்கிர நிலைக்கு, அரசன் கொலுமண்டபத்தில் அமர்ந்து அரசியலை ஆழ்ந்து நோக்குதலும் உவமையாகச் சொல்லப்படும். `சாக்கிரத்திற்கு இடம் புருவ நடு` என்பது முன்பே சொல்லப்பட்டது. அதனால் அவ்விடம் அரசனது கொலுமண்டப மாகவும் கூறப்படும்.இதனால், சகலத்தில் விளக்க நிலைகளில் உச்சகட்டமானதும், மூடநிலைகளிலும் உச்சகட்டமானதும் சொல்லப்பட்டன. இவற்றாலே இடையில் உள்ளவற்றின் இயல்புகள் தாமே விளங்கும் என்பது பற்றி.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage