
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

தானம் இழந்து தனிபுக் கிதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மால்ஆகி
ஆன விரிவறி யாஅவ் வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்திய தாமே.
English Meaning:
Deep Sleep in Heart-CentreLeaving the Throat Centre there,
Alone, he (Jiva) enters the Heart`s-Centre,
There, Egoity (Ahamkara) lost, Intellect (Buddhi) lost,
Cognition (Mind) lost
In the State that discerns not the world,
Consciousness of body bereft,
He (Jiva) reached the Deep Sleep State of Sushupti.
Tamil Meaning:
மேற்கூறிய கண்டமாகிய தானத்தை (இடத்தை) விட்டுப்புருடன் கீழ் இறங்கி, அங்ஙனம் இறங்கும் நிலையில், முன்பு இருந்த அந்தக்கரணங்களுள் மானமாகிய அகங்காரத்தையும், மதியாகிய புத்தியையும் விடுத்து, யாதொன்றையும், பற்றிநினைக்க மாட்டாத நிலையையடைந்து, இருதயத்தில் தனியேசென்று, புலன் உணர்வையிழந்து இழப்பு நிலையில் உயிரினது சொரூபமே காணப் படாது கிடக்கும் நிலையே சுழுத்தியவத்தையாம்.Special Remark:
அகங்காரத்தையும், புத்தியையுமே இழந்ததாகக் கூறினமையால், சித்தம் விடப்படாதாயிற்று. நினைத்தல் மனத்தால் ஆகலின், `நினைக்க மாட்டாது` என்றமையால் மனம் நீங்கினமையும் பெறப்பட்டது ஆகவே, பெரும்பான்மை பற்றி, `தனி புக்கு` - என்றா ராயினும், `சித்தத்துடன் புக்கு` என்பதே பொருளாயிற்று. புறப் பொருளைப் பற்றுவது மனமேயாகலின், அஃதில்லையாகவே, `அதனால் பற்றப்படும் ஞானேந்திரிய விடயங்களும், கன்மேந்திரிய விடயங்களும் இலவாம்` என்பது தானே விளங்கிற்று. தாத்துவிகம் ஆதல்பற்றி, வாயுக்களை நாயனார் கூறாதே விடுத்தலால், பிராணாதி வாயுக்களில் பிராணன் தவிர ஏனை ஒன்பது வாயுக்களும் சொப்பனத் தானத்தோடே நின்று விடுதல் உரையிற் கொள்க. இதனால், சொப்பனத் தானத்தில் செயற்படுவனவாகக் கூறப்பட்ட இருபத்தைந்து கருவிகளில் சத்தாதி விடயங்கள் ஐந்து, வசனாதி விடயங்கள் ஐந்து, வாயுக்கள் ஒன்பது, மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்கள் மூன்று ஆக இருபத்திரண்டு கருவிகள் சொப்பனத் தானத்திலே நின்று விட, `சித்தம், பிராணன், புருடன்` என்னும் மூன்று கருவிகளினாலே இருதயத்தில் சுழுத்தி நிகழும் என்க. சித்தம் செயற் படுதலால் `சுழுத்தியில் ஆன்மாவிற்கு ஆழ்ந்த சிந்தனை உண்டு` என் பதும், ஆயினும் `புத்தி` இல்லாமையால் விழித்தபின் `முன்பு என்ன சிந்தித்தோம்` என்பதை ஆன்மா உணர்வதில்லை - என்பதும் உணர்க.பிராண வாயுவை இயக்குவது அகங்கார தத்துவமே ஆகையால், `பிராணன் உண்டு` எனவே, `அதனை இயக்கும் அகங்கார தத்துவம் உண்டு` என்பது பெறப்பட்டதாயினும், அஃது பிராணனை இயக்குவதைத்தவிர, `நான்` என முனைப்புற்று எழுச்சி யாகிய தனது காரியத்தைச் செய்யமாட்டாமையால், நீங்கிய கருவி யாகவே எண்ணப்படும்.
இதனால், கேவல சுழுத்தியின் இயல்பு கூறப்பட்டது.
சுழுத்தியில் ஆன்மா அறியும் கருவிகள் இல்லாமையால் அறியாமையிற்பட்டு, முடமாய்க்கிடப்பதையே ஏகான்மவாதிகள், ஆன்மாச் சுழுத்தியின் பிரம்மானந்தத்தில் அழுந்தியிருப்பதாகக் கூறுவர். `நிர்க்குணமாகிய சுத்தப்பிரமமே அவிச்சை வசத்தால் சகுணமாகிய பந்தத்தை எய்தும் எனக் கூறுகின்ற அவர்கட்கு, `பிரம்மா னந்தத்தை அடைந்த சீவன் மீட்டும் அதைவிட்டு விடயானந்தத்திற்கு வந்துவிடும்; இந்நிலை அன்றாட நிகழ்ச்சியாகச் சீவனுக்கு மாறி மாறி நிகழும் எனக் கூறுதல் பொருந்தும். `சிவனை அடைந்து, அவனது இன்பத்தை நுகர்ந்த உயிர், மீட்டும் ஐம்புல இன்பத்தை நோக்கி வருதல் இல்லை. அதனால், சிவன் தன் அடியார்களுக்கு மீண்டு வாரா வழியையே அருள்புரிவான்` எனக் கூறுகின்ற சித்தாந்திகட்கு அது பொருந்தாது - என்பதை விளக்கச் சுழுத்தி நிலையை, `விரிவு - அறியா அவ்வியத்தம்` என்றார். விரிவு - அறியப்படுவனவாய் விரிந்து கிடக்கும் பொருள்கள். அவ்வியத்தம் - விளங்காமை. `அவ்வியத்தம்` என்பது காரண இடுகுறியாய் மூலப் பிரகிருதியைக் குறிப்பதாயினும் இங்குக் காரணக்குறியால் ஒன்றும் விளங்காதநிலையைக் குறித்தது. உலக அனுபவத்தை இழந்துவிடுவதே சிவாநுபவத்தை, அல்லது பிரம்மாநுபவத்தைப் பெற்றுவிடுதல் ஆகிவிடாது. `ஆகும்` எனின், கட் குடியில் மயங்குவோர், விடம் தலைக்கேறுதல் முதலிய காரணங் களால் மூர்ச்சையுற்றோர் முதலிய பலரும் யாதொரு ஞான ஒழுக்கமும் இல்லாமலே சிவாநுபூதியைப் பெற்றவர் ஆகி விடுவர். ஆகவே, `சுத்தத்தில் அரிதில் நிகழும் சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன வேறு; கேவலத்தில் எளிதில் அன்றாட நிகழ்ச்சியாய் நிகழும் சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன வேறு எனவும் தெரிந்துணர்ந்துகொள்க. மேனி - சொரூபம். ஆன்மாவின் சொரூபம் அறிவு.
இவ்விடத்தில் கூறப்பட்டுவருவன `கீழாலவத்தை` எனப்படும் கேவல ஐந்தவத்தைகளேயாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage