
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

தானத் தெழுந்து தருந்துரி யத்தினின்
வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத் தெழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்த வித்தைவிட் டூமன்நின் றானே.
English Meaning:
Nada Peaks in Turiya or Fourth StateFrom Sushupti Centre,
He further moves continuing,
Into Turiya Expanse
Leaving thoughts of world below;
On to peaks of Nada (in navel centre) he ascends;
There rid of primordial ignorance,
He remains in Mauna (Silence).
Tamil Meaning:
உயர் தனக்குச் சிறப்பிடமாகிய இருதயத்தினின் றும் புறப்பட்டவழி அதற்குத் தரப்படும் துரியத்தானத்தில் நின்று பின்பு அதனையும் விட்டு அப்பாற் சென்று, உலகத்தைப் பின் தள்ளிவிட்டு, நாதத்தால் உணர்வு விளங்குமாறு நிற்கின்ற குண்டலினி சத்தியின் தலைபொருந்தியுள்ள மூலாதாரத்தை அடைந்து, அவ்விடத்தில் பொருள்களை மயங்கியறிதலாகிய அந்த அறிவும் இன்றி அறிவே யில்லாதது போலக் கிடக்கும்.Special Remark:
ஆறு ஆதாரங்களும் உயிர்க்கு இடமாயினும் அவற்றுள் இருதயமே சிறந்ததாதல் பற்றியே `உயிருக்குத் தானம்` என்றார். `தானத் தினின்றும்` என ஐந்தாவது விரிக்க. `எழுந்தவழி` என்பது `எழுந்து` எனத்திரிந்து நின்றது. வாயுவுக்குமேல் உள்ளது வானம் ஆதலின், `வானத்தெழுந்து`` என்றது, பிராண வாயு நீங்கிய நிலையைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றது. பிராணவாயுவின் இயக்கமும் இல்லாது போதலின் உயிர் உலக அனுபவத்தைச் சிறிதும் உடைத் தாகாமையை, ``வையம் பிறகிட்டு`` என்றார், கானம் - நாதம், கருத்து - உணர்வு. அஃது அதனைத் தரும் குண்டலி சத்தியை உணர்த் திற்று. `வித்தை` என்பதும் உணர்வே, `அது மயக்க உணர்வு` என்றற்கு `ஊனத்த வித்தை` என்றார். ஊனம் - குறை. `ஊனமாய் நின்றான்` என ஆக்கம் விரித்து, ஆக்கம் உவமை குறித்து நின்றதாக உரைக்க. ஊமனுக்கு உணர் விருப்பினும் அதனை வெளிப்படுத்த மாட்டுவான் அல்லன் ஆதலின், அவன் உணர் வுடையனாயினும் அது செயற்படாத நிலையை உடைய உயிருக்கு உவமையாயினான். காரியமாகிய உலகத்தை நுகராமையின் காரண மாகிய மூலப்பிரகிருதியே அவ்விடத்தில் உயிருக்கு நுகர்ச்சியாவதாம்.இதனால், `பிராணவாயுவின் இயக்கமும் இன்றிப் புருடன் மூலாதாரத்தில் மூலப்பிரகிருதியைப் பற்றிக்கொண்டு, வெறும் மூடமாய்க் கிடப்பதே கேவல துரியாதீதம்` என அதனது இயல்பு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage