
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓம்மயம் உற்றது உள்ளொளி பெற்றது
நாம்மயம் அற்றது நாம்அறி யோமே.
English Meaning:
Turiyatita ExperienceWhen with silent letter ``M``
The articulate letters ``A`` and ``U`` conjoin,
The Five Senses are withdrawn,
As limbs within the tortoise;
Then Jiva is by ``Aum`` pervaded;
The light Divine beams from within;
The Self its sentience loses;
—This we know not.
Tamil Meaning:
[நால்வகை வாக்குக்களில் மிகவும் தூலமாகிய வைகரிவாக்குச் சகல ஐந்தவத்தையிலும் தூலமாகிய மத்திமை வாக்கு கேவல ஐந்தவத்தையிலும், சூக்குமமாகிய பைசந்தி வாக்கு யோகா லவத்தையிலும், மிகவும் சூக்குமமாகிய சூக்குமை வாக்கு சுத்த ஐந்த வத்தையிலும் செயற்படும். அதுபற்றித்தான் வாக்குக்கள் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகளாக எண்ணப்படவில்லை.]மேற்கூறிய நால்வகை ஐந்தவத்தைகளில் மேற்கூறியவாறு நால்வகை வாக்குக்கள் செயற்படுங்கால், சாக்கிரம் முதலிய ஐந்திலும் முறையே, தூலதமம், தூலதரம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம்` என்னும் நிலையில் செயற்படும் அதிசூக்குமமே ``ஊமையெழுத்து`` என்றும் ஏனையவை ``பேசும் எழுத்து`` என்றும் மறைபொருட் கூற்றாகக் கூறப்பட்டன. அதிகாரம் கீழாலவத்தையாதலின் இங்குக் கூறப்பட்ட, `பேசும் எழுத்து, ஊமையெழுத்து` - என்பன கீழாலவத் தையில் செயற்படுவ தாகிய மத்திமை வாக்கின் `அதிசூக்குமம், சூக்குமம்` என்பவற்றை யாம். தூலதமம், தூலதரத்திலும், தூலதரம் தூலத்திலும், தூலம் சூக்குமத்திலும் ஒடுங்கிவிடப்பின்பு சூக்குமமும் அதிசூக்குமத்தில் ஒடுங்கிவிட்டால் பெத்தநிலையில் உள்ள உயிர் புறப்பொருள்களில் யாதொன்றையும் அறியமாட்டாது உணர்வை முற்றிலுமாக இழந்து, பிரகிருதிமயமாகியே கிடக்கும். இதுவே கீழாலவத்தையில் துரியா தீதத்தின் நிலைமை. இதனையே,
``ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்``
என்றார். `ஆமை` என்றது உயிரை. இஃது உருவகம். அஞ்சு - ஐம் புலன்கள்மேல் சென்று அவற்றைக் கவர்கின்ற உணர்வு. அவ்வுணர்வு சிறிதும் வெளிச்செல்லாது உயிரோடு உயிராய் ஒட்டிக் கிடத்தல், ஆமையின் ஐந்து உறுப்புக்கள் அதனது ஓட்டிற்குள்ளே அடங்கி வெளித் தோன்றாதிருத்தலோடு ஒத்திருத்தல் பற்றி, உயிர் ஆமையாக உருவகம் செய்யப்பட்டது. சுழுத்தி துரியங்களிலும் அஞ்சும் அடங்கி யிருப்பினும் சித்தமும், பிராணனும் செயற்படுதலால் `அவற்றின் வாசனை சிறிதாயினும் இருக்கும்` என எண்ண இடம் உண்டு. உயிர்ப்பு அடங்கி விட்டமையால் அதீதத்தில் அவ்வாறு எண்ணச் சிறிதும் இடம் இல்லாமை பற்றி, இவ்விடத்திற்றானே ``அஞ்சும் அடங்கிடும்`` எனக் கூறினார். `தமோமாய்` (இருள்மயமாய்) நிற்கும் அதீத நிலையை சிவத்தில் அழுந்தி ஒளிமயமாய் நிற்கும் நிலையாகக் கூறுபவர் யாதும் அறியாதவர்` என்பதை உணர்த்துதற்குப் பின்னிரண்டடிகளைக் கூறினார். அவற்றுள் `ஓம்` என்றது அதன் உண்மைப் பொருளாய் நிற்கும் சிவத்தை.
`சுத்த துரியாதீதத்தில் சிவத்தை அடைந்த சிவமயமான உயிர், இருள் முழுவதும் நீங்கி ஒளிமயமானதாகும். அதனால் அது `நாம்` என்னும் சீவபோதமும் இல்லாததாகும். அந்த நிலையை நாம் அறிந்திலோம் என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.
Special Remark:
கீழாலவத்தையைக் கூறிவருகின்றார் ஆகலின், அது பற்றித் தம்மை அந்த அவத்தையின் நின்று பேசுபவராக வைத்து, ``நாம் அறியோம்`` என்றார். ஆகவே `கீழாலவத்தையில் நிற்போர் சுத்த வத்தையின் அனுபவத்தை அறியார்` என்பது அதன் உண்மைப் பொருளாயிற்று.இதனால், `கீழாலவத்தைத் துரியாதீதம் இருள் மயமானது, என்பது உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage