
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடா ணவத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.
English Meaning:
Maya Awakens Soul From Primordial (Kevala) SlumberAs with his staff the teacher rouses the pupil
Who in his presence slumbers,
Even like it,
The benevolent Lord with Maya awakens
The Soul that in prolonged Egoity slumbers.
Tamil Meaning:
அநாதியே பற்றி, இறுதியற்றிருக்கும் ஆணவ மலத்தால் அறிவிழந்து கிடக்கும் உயிர்களைக் கருணையே உருவாய் உள்ள இறைவன் எவ்வாறு அறிவை மறைத்தல் இன்றி, அதனை விளங்கச் செய்வதாகிய மாயையாகிய பணிப்பெண்ணை விட்டு ஆணவ உறக்கத்தினின்று தட்டி எழுப்பும்படி செய்வான். இது நல்லாசிரியன் ஒருவன் முன்னைநிலையில் சோம்பலால் உறங்கி விடுகின்ற சில மாணவர்களை அவ்வாசிரியன் மாணவர்களது அறிவை வளர்க்கத் தனது கையில் கொண்டுள்ள பிரம்பால் தட்டியெழுப்புதல் போல்வது.Special Remark:
`ஆசான்எழுப்பும்` என இயைக்க. `தன்முன்னே துயில் மாணவகரை` என்க. உவமையில் சொல்லளவில் திணை மயங்கின எனினும், பொருளில் மயக்கம் இன்று. நேசம்` என்பது கடைக் குறைந்து நின்றது `ஆணவத்தரை மாயையால் எழுப்பும்` என்றதனால், `ஆணவம் சோம்பல்போல உறக்கத்தை விளைவிக்கும்` என்பதும், `மாயை ஆசான் கைப்பிரம்புபோல உறக்கத்தினின்றும் விழிப்பிக்கும்` என்பதும் பெறப்பட்டன. இன்னும், மாயையை ஆசானது கையில் உள்ள பிரம்போடு உவமித்தமையால், `அது சிவனுக்கும் பரிக்கிரக சத்தியேயன்றித் தாதான்மிய சத்தியன்று` என்பதும் விளங்கிற்று. இம்மந்திரப் பொருள் உமாபதி தேவரது சதரத்த சங்கிரகத்துள். l``குருர் யதாக்ரதா; சஷ்யாந் ஸுப்தாந் தண்டேந போதயேத் I சவோபி மோஹநீத்ரயாம் ஸுப்தாந் சத்தியா போதயேத் II
எனக்கூறப்பட்டது. அதனைத் துறைமங்கலம் சிவப்பிரகாசர் தமது சதமணி மாலையில்,
``குரவன் முன்துயில் கொள்ளும்மா ணாக்கனை
உரிய கோல்கொண் டுணர்த்துவன்; ஈசனும்
துரிய போகத் துயில்கொளு வான்றனை
அரிய சத்தியி னால்அறி விக்குமே`` 8#
என மொழிபெயர்த்தார்.
சதரத்ந சங்கிரகத்தின் மூலத்திலும், அதன் மொழிபெயர்ப்பிலும் `சத்தி` எனப் பொதுவாகக் கூறப்பட்டதனை இம்மந்திரத்தில் `மாயாள்` எனச் சிறப்பாக விளக்கினமை அறியத்தக்கது.
இதனால், `கேவலாவத்தைக்கு காரணம் ஆணவ மலம்` என் பதும், `சகலாவத்தைக்குக் காரணம் மாயை` என்பதும் கூறப்பட்டன.
`ஏசாத மாயை` என்றது, `அறிவை மறைத்தலைச் செய்யாது, விளக்கத்தைச் செய்வது` என்னும் குறிப்புடையதேயாகும். அதுபற்றி, `சுத்தமாயை` எனப் பொருள் கூறுதல், `பிரளயாகலர், சகலர்` என்னும் இவர்கட்குப் பொருந்தமாட்டாது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage