
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து)
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.
English Meaning:
But Only the Four Intelligence Organs are Involved in Dream VisionThus it is, Jiva with Tattvas four and ten
In Dream State stands;
But with the ten sense organs uninvolved
With Antahkaranas Four alone,
And aided by the memory
Of earthly life here below,
He (Jiva) in the Throat-Centre,
Dreams visioned.
Tamil Meaning:
ஞானேந்திரியமும், கன்மேந்திரியமும், அந்தக் கரணங்களும் ஆகிய பதினான்கு கருவிகளோடு கூடிச் சாக்கிரா வத்தையில் நின்ற புருடன், அவ்வாறு நிற்கும் நிலையிற்றானே இரு வகை இந்திரியங்களாகிய பத்துக் கருவிகளை நீக்கிவிட்டு, எஞ்சிய நான்காகிய அந்தக்கரணங்களோடு மட்டும் அழுத்தமான கண்டத் தானத்தில் சென்று, முன்பு சாக்கிரத்தில் புருவ நடுவில் நின்று நுகர்ந்த உலக நுகர்ச்சிகளின் வாசனையைக் கனவாகக் காண்பான்.Special Remark:
அவத்தைக்கு ஏதுவாவனவாக மேற்கூறிய கருவிகள் முப்பத்தைந்தனுள் ஞானேந்திரிய விடயம் ஐந்தும், கன்மேந்திரிய விடயம் ஐந்தும், பிராணாதி வாயுக்கள் பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்களாதல் பற்றி அவற்றை விடுத்து, தத்துவங்களாகிய பதினைந்து மட்டுமே இங்குக் கூறினார். கண்டத்தில் கனா நிகழும் பொழுது, `அந்தக்கரணம், புருடன்` என்னும் ஐந்தோடு தாத்துவிகங் களாகிய இருபதும் கூட, இருபத்தைந்து கருவிகள் செயற்படும் என்பது அறிக. இதுவே சொப்பனமாம்.`மன்று` - என்றது புருவ நடுவை. கன்றுதல் - இறுகப் பற்றுதல். விழிப்பினின்றும் நீங்கிய உயிரை அமைதியாக உறங்க ஒட்டாது கனாவில் பிணித்து வைத்தல் பற்றிக் கண்டத்தானத்தை, `கன்றிய கண்டம்` - என்றார். `வாதனையைக் கனவாகக் கண்டான்` என்க. அது, பகுதிப்பொருள் விகுதி. பல நாளும் நிகழ்வதை எதிர்காலத்தாற் கூறாது, ஒரு காலத்தின்மேல் வைத்து, இறந்த காலத்தாற் கூறினார். `பதினாலிற் பத்து நீத்து` என்றதனானே, கேவல சாக்கிரம் முப்பத் தைந்து கருவிகளால் நிகழ்தல் பெறப்பட்டது.
இதனால், கேவல சாக்கிரம், கேவல சொப்பனம் ஆகிய அவத்தைகளின் இயல்பு கூறப்பட்டது. கேவல ஐந்தவத்தையே கீழாலவத்தையாதல் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage