
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
பதிகங்கள்

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.
English Meaning:
Know the Relationship Between Body and JivaThe bodies (Causal, Subtle and Gross) embrace one another,
But the Jiva within body stood,
They know not;
They who the kinship between body and Jiva
Understood not,
Are verily bewildered
Like the dog that into a kitchen abrupt strays.
Tamil Meaning:
அதிசூக்கும சரீரம் முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால் உயிர் அம்மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, `உடம்புதான் உயிர்` எனமயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள் தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையாது` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியன வாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்திருக்கின்றார்கள்.Special Remark:
`இஃது அவர் அறியாமை இருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `தழுவி` என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருளில் வந்தது. இரண்டாம் அடியில் `அவ்வுடம்பிடை` எனச்சுட்டு வருவிக்க. `சாக்கிரம் முதலிய அவத்தைகளின் இயல்பை அறிவார்க்கு, உயிர் உடம்பின் வேறாதல் தெற்றென விளங்கும்` எனற்கு இம்மந்திரத்தை இங்கு அருளிச்செய்தார். `கனவில் தூல உடம்பு செயலற்றுக் கிடை யாய்க் கிடக்கவும் உயிர் சூக்கும உடம்போடு கூடிச் செயற்படுதல் அனு பவம் ஆதலின், அவ்வாறே உயிர் ஏனை உடம்புகளின் வேறானது என்பது ஏனையவத்தைகளையும் உணரின் விளங்கும்` - என்பதாம். சிவஞான போதம் மூன்றாம் சூத்திரத்திலும் அவத்தைகளின் இயல்பு பற்றியே உயிர் உடம்பின் வேறாய் உண்மை நாட்டப் பட்டது. `நின்ற உயிர்` என்றாரேனும் `உயிர் நின்றமை` என்றலே கருத்து.``குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு``
என்னும் குறளில் 8 `நட்பு` என்றது நட்பு இன்மையைக் குறித்து நின்ற குறிப்பு மொழி என்பது அதன்கண் கூறப்பட்ட உவமையால் விளங்கும். அஃதே இங்கும் கூறப்பட்டது. மடத்திற்கும், நாய்க்கும் இயைபில்லையாயினும், ஏதோவொருவழியால் நாய் மடத்தினுள் புகுந்து விட்டதாயினும் அஃது அங்கு நிலையாது நீங்குதல்போல, சடமாகிய உடம்புகட்கும், சித்தாகிய உயிருக்கும் இயைபில்லை யாயினும், வினைகாரணமாக உயிர் உடம்போடு இயைந்து நின்றது ஆகலின், அவ்வியைபு நிலையாது நீங்குதல் இயல்பென்றவாறு. இங்ஙனம் உவமையை விரித்துரைத்துக்கொள்க.
இதனால், `மேற்கூறிய உடலின் பஞ்ச பேதத்திற்கு அனுபவம் அவத்தை பேதங்கள்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage