
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.
English Meaning:
Herself Uncreated, She is Source of CreationShe as supreme Mistress of all creation stood
She the uncreated Being, Tatparai;
She is Worlds Fourteen
That were from Bindu created;
She is World of Celestials,
She is Mind and Intellect,
She is Siva-State too.
Tamil Meaning:
உயிர்களால் பொதுப்பட `அது` எனக் கூறப்பட்ட தலைவியாய், அவ்வுயிர்கட்கு மேலே இருப்பவளும், ஐந்தொழிற்கும் முதல்வியும், சுத்த மாயை அசுத்த மாயைகளின் காரியங்கள் பதினான் கும், பிரகிருதியும், அதன் காரியங்களாகிய அந்தக்கரணம் முதலியன வுமாய் நின்று உயிர்களைப் பந்திப்பவளும், பின் அவற்றினின்றும் நீக்கி வீட்டை எய்துவிப்பவளும் எல்லாம் திரிபுரையே ஆவள்.Special Remark:
தத் + பரை = தற்பரை; `தத்` என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்ற மேலிடத்தவள். உயர் வித்து - பிரகிருதிக்கு மேலே உள்ள முதனிலைகள்; அவை சுத்த மாயையும், அசுத்த மாயையுமாம். அவற்றுள் சுத்த மாயையின் காரியம் ஏழு. அவை, பரநாதம், அபர நாதம், சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தையின் ஊர்த்துவ பாகம், மத்திய பாகம், அதோ பாகம்` என்பன. ஊர்த்துவபாகம் உருத்திர னுக்கும், மத்திய பாகம் திருமாலுக்கும், அதோபாகம் அயனுக்கும் இடமாய் இருக்கும். அசுத்த மாயையின் காரியம் ஏழு வித்தியா தத்துவங்கள். மான் - பிரகிருதி. `மானாகிய ஓர் தலம்` என்க. இது பிரகிருதியாதல் பற்றி, `தலம் - இடம்` என்றார். ``மனமும், நற்புத்தியும்`` என்றது ஆன்ம தத்துவம் அனைத்திற்கும் உபலக்கணம். தன்மை - ஈகைக் குணம். தன்மை உடையவளை, ``தன்மை`` என்றார்.இதனால், திரிபுரையது முழுமுதல் தன்மை இனிது விளக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage