
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
பதிகங்கள்

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே.
English Meaning:
The Inner Meaning of Six-Pointed ChakraMamaya, Maya, Baindava, Vaikari,
Pranava (AUM), the Inner Light (Ajapa)
Thus art Mantras in clusters six,
Where Sakti resideth;
There and beyond them
Is Tiripurai.
Tamil Meaning:
மாமாயை முதலாகச் சொல்லப்படும் பொருள்கள் யாவும் தானேயாயும், அல்லவாயும் சிவ சத்தி நிற்பாள்.Special Remark:
மா மாயை - சுத்த மாயை. இதுவே வியாபகமாய்ப் பெரிதாதலின் இப்பெயர் பெற்றது. `மாயை` என வாளா கூறும் வழியெல்லாம் அஃது அசுத்த மாயையையே குறிக்கும். வயிந்தவம் - விந்துவின் காரியம்; சுத்ததத்துவங்கள். சுத்த மாயைக்கு `விந்து` என்பது பெயராகலின், அதன் காரியங்கள் `வைந்தவம்` எனப்படும். அசுத்த மாயையின் காரியங்கள் `மாயேயம்` என்றும், பிரகிருதியின் காரியங்கள் `பிராகிருதம்` என்றும் சொல்லப்படும் என்பதும் இங்கு உணர்ந்து கொள்க. வைகரி - வைகரி, முதலிய நால்வகை வாக்குகள். அவை, `வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை` என்பன. சூக்குமை, `பரை` எனவும்படும். இது காரணநிலையாய், நுண்ணிதாய் நிற்பது. `நாதம்` எனப்படுவதும் இதுவே. இதன் விருத்தி (வளர்ச்சி) வகைகளே பைசந்தி முதலிய ஏனைய மூன்றும். ஓ மாயை - அசுத்த மாயை யினின்றும் தோன்றிய, ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை. `மூலப் பிரகிருதி` எனப்படுவது இதுவே. ஓவுதல் - நீங்குதல்; வெளிப்படுதல். உள்ளொளி - குண்டலி சத்தி. மந்திரங் களின் கோடி (முடிவு) ஏழனுள், `ஹும், பட்` என்னும் இரண்டும் சிலவிடத்து ஒன்றாக எண்ணப்படும். அம்முறை பற்றி இங்கு ``ஓராறு கோடியில் தாமான மந்திரம்`` என்றார். ஏழு கோடிகள் முன் தந்திரத்தில் கூறப்பட்டன. சத்தி தன் மூர்த்திகள் - சத்தியின் வேறுபாடுகள்தாம் பல. அவை, `ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி` என்பனவும், `ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி` என்பனவும், `வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி,` எனவும், `சத்தி, விந்து, மனோனமனி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும், மற்றும் பலவுமாம். `ஆம் ஆய்` `` என்பதில், `ஆம்` அசை நிலை. `அன்று, அல்ல` என்பன வற்றைப் பொதுவினை போலக்கூறுதல் சிலவிடத்துக் காணப்படு கின்றது. ஆங்கு - சிவன் நினைத்தவிடத்து.இதனால், `சிவனது சத்தியே பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்கும்` என்பது கூறப்பட்டது.
``பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணும் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள் அத்துவித மாதல்`` 1
என்ற சிவஞான போதத்தைக் காண்க. இதனுள் `தான்` என்றது சத்தியாதல் அறிக. ஒன்றாதலும் வேறாதலும் கூறவே உடனாதலும் பெறப்பட்டது.
``பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை`` 2
என்பது அப்பர் திருமொழி. இங்ஙனமாகவே சிவனுக்குப் பிற பொருள்களோடு தொடர்பு உண்டாதல் அவனது சத்திவழியேயாதல் அறியப்படும்.
இதனால், `எல்லாப் பொருளும் சத்தியே` என அவளது சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage