ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை

பதிகங்கள்

Photo

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 

English Meaning:
Those Who Do Not Adore the Lord, Lie writhing in the Seventh Hell
While the body the Lord of blooming Konrai wrought
And Life worshipping not the Divine,
In the Seventh hell, neglected lie,
Writhing in pain and wordless agony keen,
The kith and kin, widely crying, did shout and howl and sigh
Tamil Meaning:
விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.
Special Remark:
மாயன் - கள்வன். தோன்றாது மறைந்து நிற்றலின் இவ்வாறு கூறினார். படைத்தலை உயிர்க்கு ஏற்றுங்கால், புணர்த்தலாக உரைக்க. `இடரொடு` என உருபு விரிக்க. `நரகம் ஏழு` என்பதற்கு, முதல் நரகம் ஒன்றே ஏழு நரகங்களை உடையதாயிருக்கும் என்னும் கருத்தினாலாம் என்பதே ஆகம நெறியாகலின், `ஏழ் நரகம்` என்னாது, ``ஏழாம் நரகு`` என்றார். மேற்கூறியவாற்றால் நோக்க நரகம் எட்டாகும். அவை, `இரௌரவம், துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மகாபதுமம், காலசூத்திரம்` என்பன. இவற்றுள் இரௌரவமே முதல் நரகம்; ஏனைய ஏழும் கிளை நரகங்கள். இன்னும், `இவை நரகம்` என்று வைத்து, மற்றும் `மகா நரகம், இராச நரகம், இராச ராச நரகம் என்று மூவெட்டு நரகங்கள் உள்ளன என அவற்றின் பெயர் முதலியவற்றைச் சிவாகமங்கள் விரித்துக்கூறும். எல்லாவற்றிலும் முதலிற் சொல்லப்படுவன ஒழித்து ஏனைய கிளை நரகங்களாம். ``நரகம் ஏழ்புக நாடின ராயினும்`` (தி.3 ப.49 பா.7) என்ற ஞானசம்பந்தர் திருமொழியில் எழுந்த ``நரகம் ஏழ்`` என்பதற்கும் சிவாகமங்களின் வழி இவ்வாறே பொருள் உரைக்கப்படும். `மக்கள் உடம்பை உயிர்கட்குச் சிவபெருமான் படைத்துக் கொடுத்தது, தன்னை வணங்குதற் பொருட்டே` என்பதை,
``மானிடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத்தைந்தும் ஆடும் அரன்பணிக்காக அன்றோ``
(சிவஞான சித்தி. சூ. 2.92)என்பதனானும் அறிக. `கொடுத்தவனது குறிப்பிற்கு மாறாகக் கொடுக்கப்பட்ட பொருளைப் பயன்படுத்துதல் உய்தியில் குற்றமாம்` என்றபடி.
இதனால், `யாக்கை நிலையாமையை உணர்ந்தோர் அஃது உள்ளபொழுதே அதனாலாகும் பயனைப் பெற முயலுதல் வேண்டும்; இல்லாவிடில் இடர் விளையும்` என்பது கூறப்பட்டது,