
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.
English Meaning:
When Body - Pot Breaks None Cares To Retain ItThis universe entire of treasures vast compact
The Great Potter from watery clay wrought to shape;
If the moulded pot breaks, men keep the pieces still,
But if the body cracks, who even a whit cares to keep?
Tamil Meaning:
உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்கொணர்ந்து தங்கள் அகத்தினுள்ளே முற்றத்தின்கண் பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக்குடங்கள் ஆளப்பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று அகத்திலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய உடம்புகள் சிதைந்தால், நொடிநேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க ஒருப்படார்.Special Remark:
ஒருப்படாமைக்குக் காரணம், சிதைந்த, உடம்பு பெரிதும் தீ நாற்றம் வீசி, மக்களுக்கு இன்னல் விளைத்துத் தானும் அழுகியொழிவதாய் இருத்தலே. ``அதனால், பின்னர் அத்துணை நெருப்புக்கு முதலாகும் உடலை முன்னரே வெறுத்து உயிர்க்கு உறுதி தேடக் கருதுதலே அறிவுடைமையாம்`` என்றவாறு. ``ஓர் குயவன்`` இனம் பற்றிய ஒருமை, உயிர் நீங்கியபின், உடல் பலராலும் வெறுக்கப்படும் பொருளாம் என்பதனை,``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே`` -தி.5 ப.90 பா.4
என்று அப்பரும் அருளிச்செய்தார், ``வைப்பர்`` என்றும், ``வையார்`` என்றும் உறழ்ந்து காட்டிய அதனால், பண்ணப்படும் முறையில் இரண்டும் ஒத்தல் பெறப்பட்டது. படவே, `உடல்களும் உலகெங்கும் தந்தையது உடம்பினின்றும் ஒரு கூற்றை எடுத்துத் தாயின் வயிற்றில் வைத்து உருப்பெருமாறு படைப்புக் கடவுளால் ஆக்கப்படும்` என்பது கொள்க. இத் திருமந்திரம் வேற்றுமையணி. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage