
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.
English Meaning:
What Did the Body Leave Behind?When three hundred days are gone, the foetus emerged,
Naught remains of it now, dear friends, you know;
In twelve years` time it learned to smell the rich odours of life,
At seventy it turned to dust—thus briefly ends the show.
Tamil Meaning:
அறிவில்லாத மக்களே, தாய் வயிற்றில் முட்டை யாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு வெளிப்போந்தது. பின் பன்னிரண்டு ஆண்டுக் காலக்கணக்கில் அதற்கு மணவினை என்னும் பேச்சும் உலகத்தில் நிகழ்ந்தது; பின் எழுபது ஆண்டுக் காலக் கணக்கில் செயல் இழந்து கிடந்தது. இவ்வாறு அது ஒவ்வோர் இமையும் அழிவு நெறியிற் சென்று கொண்டிருத்தலை அறிந்திலீர். அதனால் உமக்குத் துணையாக நீவிர் தேடி வைத்துக் கொண்டது யாதும் இல்லை.Special Remark:
சேமித்தலை ``இட்டது`` என்றார். மணவினையைப் பெண்டிர்க்குப் பன்னிரண்டாண்டு அகவையினும், ஆடவர்க்குப் பதினாறாண்டு அகவையினும் நிகழ்த்துதல் பெரும் பான்மை வழக்க மாதலின், எல்லாம் அடங்க, ``பன்னிரண்டாண்டினில் மணம் பட்டது` என்றார்.எனவே, ``மணம்` என்றதனை இரட்டுற மொழிந்து பெண்டிர்க்கு `மண வினை` என்றும், ஆடவர்க்கு `மணம் என்ற பேச்சு` என்றும் பொருள் உரைத்துக் கொள்க.
சுற்றத்தார் ஆடவர்க்குப் பன்னிரண்டாண்டிற்றானே. `இவற்கு இன்னாளை வாழ்க்கைத் துணைவி ஆக்கல் வேண்டும்` என வரையறை செய்ய முயலுதல் இயல்பு என்க.
இதனால், உடம்பு, `காலம்` என்னும் வாளின்வாய்ப்பட்டு இடையறாது அறுக்கப்பட்டு வருகின்றது என்பது கூறப்பட்டது.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். -குறள். 334
என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்;
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்;
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
என்ற நாலடியார்ச் செய்யுளும் நோக்கத்தக்கது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage