
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.
English Meaning:
Body is Karmic FruitFruit of fig and seeds of green to pieces chopped,
In a pot they placed, mixed and ground to paste;
Seeds of green the fruit of fig consumed,
Loud they wailed, and bore the body in haste.
Tamil Meaning:
அட்டில் தொழில் செய்வார் வறிய குடும்பத் தலைவன் ஒருவனுக்கு அத்திப் பழத்தையும், அறைக் கீரை விதையையுமே திருத்தி உலையில் இட்டு உணவும், கறியுமாக ஆக்கிவைத்தார்கள். அந்த உணவை அக்கறியோடு உண்பதற்கு, வேண்டப்படாத கூரிய கத்தியை எடுத்து அவாவுடன் புகுந்த அத்தலைவன், அதற்குள்ளே சுடுகாட்டை அடைந்தான்.Special Remark:
`இவ்வாறு விரைய வருகின்றது நிலையாமை` என்பதாம். அத்தி, எலும்பு ஆகலின், அதனிற் பழுத்த பழம் போல்வது பருவுடம்பு (தூல தேகம்). அறைக்கீரை, அறுக்க அறுக்கத் தளிர்த்து வளர்வதாகலின், அதனோடொப்பது, ஒரு பருவுடம்பு நீங்க, வேறு பருவுடம்பைத் தொடர்ந்து தரும் நுண்ணுடம்பு (சூக்கும தேகம்). இதனை, ``காலம் உற்று - நீக்கிட மரம் பின் வேர் ஓர் நீள்மரம் நிகழ்த்துமாபோல்`` (சிவஞானசித்தி. சூ. 2. 48) என்றார் அருள் நந்தி சிவாசாரியரும். `கூழ்` என்னும் பொதுச் சொல்லால் உணவும், கறியும் கொள்ளப்பட்டன. அவ்விருவகை உடம்புகளாலும் உண்டாகும் பயனை அவையேயாகச் சார்த்திக் கூறினார். பருவுடம்பே புறப்பொருளை நுகர்வதாகலின் அதனை உணவாகவும், அதற்குத் துணைசெய்து நிற்பதே நுண்ணுடம் பாகலின் அதனைக் கறியாகவும் உருவகித்தார். கொத்தி உலைப் பெய்து அடுதல் உயிரின் பக்குவத்திற்கேற்ப அமைத்தல். ``உண்ணக் கத்தி எடுத்தவர்`` என்றது மாம்பழம், பலாப்பழம் முதலியவை ஆயின் அவற்றை உண்ணக் கத்தி வேணடும்; அத்திப் பழம்; அது தானும் வேவித்த பழம்; அதை உண்ணக் கத்தி எதற்கு என்னும் குறிப்பினது. ``கத்தி எடுத்தவர்`` என்றது, `இறைவன் திருவருளை நாடியவர்` என்ற தாம். இறைவன் திருவருளைப் பிறவிக் கடலைக் கடத்தற் பொருட்டு நாடுதலே முறை, அதனை விடுத்து, உலகப் பயனைப் பெறுதற்கு நாடுதல் ஏன் என்பது பின்னிரண்டடிகளின் உள்ளுறைப் பொருள்.``பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீஅறிந் துந்தீபற
அறிந்தறி யாவண்ணம் உந்தீபற`` -மெய். திருவுந்தியார் 38
எனவும்,
``முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்தென் றுந்தீபற
அப்பழம் உண்ணாதே உந்தீபற`` -மெய். திருவுந்தியார் 41
எனவும் வரும் திருவுந்தியாரையும்
முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னும் - கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும்
ஏகக் கொடிஎழுங்காண் இன்று. -மெய். திருக்களிற்றுப்படியார் 38
என வரும் திருக்களிற்றுப்படியாரையும் காண்க.
இறைவனை உலகப்பயன் கருதி வழிபடுதல் `காமிய வழி பாடு` என்றும், பயன் கருதாது வழிபடுதல் `நிட்காமிய வழிபாடு` என்றும் சொல்லப்படும். அவற்றுள் காமிய வழிபாடு செய்யத் தொடங்கினோர் அது முற்றுப் பெறுதற்குள்ளே வந்து நிலையாமை பற்ற, கருதிய பயனையும் இழந்து மீளப் பிறவிக் கடலுள் மூழ்கலால் அந்நிலையாமையை உணர்ந்து காமிய வழிபாட்டை விடுதல் வேண்டும் என்றபடி ``காமியம் செய்து காலங்கழியாதே`` (தி.5 ப.22 பா.8) என்று அருளிச் செய்தார் அப்பரும். காமிய வழிபாட்டு முயற்சியின் தன்மையை,
பரப்பமைந்து கேண்மின்இது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடுங் கடன். -திருவருட்பயன், 39
என விளக்குவர் உமாபதி சிவனார். ``வித்துண்ண``என்றதன் இடை யில் அடுக்கிவந்த இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage