
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
English Meaning:
Lamp Remained; Flame DiedThe lamp remains but the flame is out,
Loud the fools lament unaware that the oil is spent,
Night follows day—this they fail to grasp,
And thus immersed fall and moan,
Ever sobbing more and more.
Tamil Meaning:
அகல் இருப்பினும், இருளை ஓட்டிப் பொருள் களை விளக்குகின்ற சுடரை அணைத்து விட்டால், அவ்வகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்ததாம். (அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், அஃதாவது, உயிர் உள்ள அளவே வாழ்வும், அது நீங்கிய பொழுதே கேடும் உடம்பிற்கு உளவாகும்.) இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர் ஆரவாரிப்பர். பொழுது விடிந்தும் இருளில் கிடத்தலோடு ஒப்ப வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, மேற்சொல்லிய உடம்பின் இயல்பு கண்கூடாக விளங்கிநிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப்பற்றிய பற்றில் அழுந்திக் கிடந்து, அதற்கு மேற்குறித்த நிலை வரும்பொழுது துயருறுதல் இரங்கத்தக்கது.Special Remark:
``விளக்கெரி`` வினைத்தொகை. அணைத்தலை, `கொள்ளுதல்` என்றார். `கொண்டான்` என்பது பாடம் அன்று. ``முடிஞ்சது, விடிஞ்சு, படிஞ்சு`` என்பவற்றில் நகர தகரங்கட்கு ஞகர சகரங்கள் போலியாய்வந்தன. முடிதலுக்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `விடிஞ்சிருளாவது போல`` என உவம உருபு விரிக்க. `குருடர்க்கு` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `உடம்பின் நிலையாமையை அறிதற்குக் காட்சியே அமைவதாகலின், நூல் வேண்டுவதில்லை` என்பதனை நாவுக்கரசர்,``நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்,
சுடலை சேர்வது சொற்பிர மாணமே`` (தி.5 ப.90 பா.4)
என்று அருளிச் செய்தார்.
இதனால், `யாக்கை நிலையாமை காட்சியானே விளங்குவது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage