
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
பதிகங்கள்

கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
English Meaning:
The Lute Lay in Dust; the Music CeasedDeserted the banquet-hall, unlit, unadorned,
Gone the dancer`s swaying shape and flashing feet;
Another song now they sang to a wailing tune,
And, seeking fire, flung the body to its consuming heat.
Tamil Meaning:
கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்.Special Remark:
இதன் உள்ளுறைப் பொருள் வெளிப்படை. காரணத்திற் குரிய தேடப்பட்ட தன்மையைக் காரியத்தின்மேல் ஏற்றிக் கூறினார். இனி, ``தீ`` என்றது காரிய ஆகுபெயராய், விறகினை உணர்த்திற்று எனினும் ஆம். `பண்ணில்பாடுகின்றாராயும், அழுதிட்டும்` என்க.இதனால், `யாக்கையது நிலையாமை, ஒரு கண்மாயம் போல வந்து நிற்பது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage