
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
பதிகங்கள்

உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.
English Meaning:
Shapes of Sacrificial PitsThe sacrificial pit is triangle-shaped;
It is square shaped, pentagon shaped;
And hexagon shaped, triangle upon triangle made;
Other pits that blaze in fire, we later relate.
Tamil Meaning:
மேற் சொல்லப்பட்ட குண்டங்களிலே முக்காலங் களையும், ஐம்பெரும் பூதங்களையும், மும்மல நீக்கத்தையும் `அக்கினி` என்ற ஒன்றன் வழியாகவே காணுதல் கூடும். ஆதலின், அக் குண்டங்கட்கு மேலான தெய்வ இடங்களாக நான் வேறொன்றை அறிந்திலேன்.Special Remark:
``முக்காலம்`` என்றது, அவற்றின்கண் உள்ள நிகழ்ச்சிகளை. அவற்றுள், இறந்தோரை நற்கதி எய்துவித்தல் முதலியன இறந்தகாலம் பற்றியன, பகைவரை அழித்தல் முதலியவை நிகழ்காலம் பற்றியன, மகப் பேறு முதலியவை எதிர்காலம் பற்றியன. ஐம்பெரும் பூதங்களைக் காணுதல் அவற்றின் வடிவாய் அமைந்த குண்டங்களை வழிபட்டுப் பயனடைதல். `நிலம், நீர், தீ, வளி, வானம்` என்னும் பூதங்கட்கு வடிவம் முறையே, `நாற்கோணம், பிறை, முக்கோணம், அறுகோணம், வட்டம்` என்பனவாதல் நன்கு அறியப் பட்டது. 1 இதனுள் பிறை வடிவம் சந்திரனுக்கு ஆகும். சூரியனுக்கு வட்டத்தின் வகையாகிய தாமரை ஆகும். முக்கோணத்தைச் சிறிது வேறுபடுத்தி யோனி வடிவாக்கச் சத்திக்கு ஆகும். ஒரு சதுரத்தின் மேல் மற்றொரு சதுரம் வடக்கு முதலிய திசைகளை நோக்கி அமைந்த மூலைகளை உடையன போல அமைக்க அட்டகோணம் அட்டமூர்த்தி வடிவினனாகிய சிவபிரானுக்கு ஆகும். பஞ்சமுகம், பஞ்சாக்கரம், பஞ்சக்கிருத்தியம், பஞ்ச மூர்த்திகள் முதலியன பலவற்றிற்கும் இயைபுடைய பஞ்சமுக குண்டமும் பதும குண்டத்தின் வேறுபாடாய் அமைவதாம். இவ்வாறாக நவகுண்டமும் காண்க. இவற்றை நாயனார் பின்னர் (1027) விதித்தல் அறியத் தக்கது. குண்டங்கள் வழிபாட்டிற்கு ஏற்பப் பல வகையாக அமைத்தல் சொல்லப்படினும், எல்லாவற்றிற் கும் பெரும் பான்மை நாற்கோண குண்டமே அமைத்தல் காணப்படு கின்றது. அது பிருதிவியின் அடையாளமாதல் பற்றிப் போலும்.இதனால், நவகுண்ட வடிவுகள் குறிப்பாற் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage