
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
பதிகங்கள்

அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.
English Meaning:
Intense DevotionMy heart melting, I moan and rave,
My bones melting, I adore day and night,
My gold, my Guru, my Lord, my God,
Him I eat, bite and chew
Tamil Meaning:
`தன்பால் காதல் மிக்க பெண்டினிடம் காதல் மிக்க ஆடவன் அவளது நலத்தை எவ்வாறு கண்டு, கேட்டு உண்டு, உயிர்த்து, உற்று அனுபவிப்பானோ அது போல என்பால் அருள்மிக்க சிவனிடத்தில் நான் அன்பு மிகுந்த அவனது ஆனந்தத்தைப் பல்லாற்றானும் அனுபவிக்கின்றேன் என்பது இம் மந்திரத்தின் திரண்ட பொருள். (திருத்துதல் - தனக்கு ஏற்ற வகையில் கொள்ளுதல். `தானே` என்பது பாடமன்று)Special Remark:
`அன்பால்` என உருபு விரித்து, `அன்பால் உள் உருகி, என்பும் உருக. அழுவன்;அரற்றுவன் எனவும் `என் பொன் மணியை இறைவனை, ஈசனை இராப் பகல் ஏத்தி, தின்பன் ... நானே எனவும் இயைக்க.`அன்பே இன்பாவதன்றி, வேறில்லை` என்பதை,
``ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்து
இன்பமே! என்னுடை அன்பே``8
எனவும் `யான் அனுபவிக்கும் இன்பமாவது என்னுடைய அன்பே` என அருளிச் செய்த திருவாசகத்தாலும்,
``இன்பில் இனிதென்றல் இன்றிண்டேல் இன்றுண்டாம்;
அன்பு நிலையை அது`` *
என்னும் திருவருட் பயனாலும் அறிக.
``அன்பே சிவமாவது ஆரூம் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே``*
என இந்நாயனாரும் மேலே கூறினார்.
``எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்``*
என்றார் தொல்காப்பியனாரும், எனவே அன்பு நிலைதான் இன்ப நிலையேயன்றி, அனபில்லாத நிலை ஒரு வறட்டு நிலையேயாகும்.
இதனைத் திருவள்ளுவர்,
``அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதேதால் போர்த்த உடம்பு`` *
என வேறொரு வகையால் விளக்கினார். இஃதே பற்றி மெய்கண்ட தேவரும், ``அயரா அன்பின் அரன்கழல் செலுமே``3 என்றார்.
ஞானமாவது, பொருளியல்புகளை உள்ளவாறு உணர்தல், அது, துன்பப் பொருளின் நீங்கி, இன்பப் பொருளைப் பற்றுதற்கு ஏதுவாம், ஆயினும் அதனாலே இன்பப் பொருளை உணர்ந்து பற்றினவன் அதனை மேலும் மேலும் விரும்பிதலாற்றான் அதனது இன்பத்தை அனுபவித்தல் கூடும். அந்த விருப்பமே அன்பு, அது முடிவின்றி வளர்தலாற்றான் இன்பமும் முடிவின்றி வளர்கின்றது. இதனையே ``பெருமபோகம் பின்னும் புதிதாய் ... ... ... வளர்கின்றதே`` என்னும் திருக்கோவையார் விளக்கிற்று.
``அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்,
செறிதொறும் சேயிழை மாட்டு``3
என்றதும் இதனையே. ஆகவே, `ஞானத்தால் அடையத்தக்கது அன்பே` என்பதும், `அந்த அன்பே இன்பத்தை விளைக்கும்` என்பதும் போதரும். இதனையே சேக்கிழார்.
``ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார்`` l
என அருளிச்செய்தார். இவ்வாற்றால், ஞானம் வித்தாக, அன்பே விளைவதால் விளங்கும். வித்தை வேண்டுவது, விளைவின் பொருட்டேயன்றோ! ஆகவே, ஞானத்தை மட்டும் வேண்டு, அன்பை வேண்டாதவர், வித்தை வேண்டி, விளைவை வேண்டாதவர் ஆகின்றனர். இதனைத் திருவிந்தியார்.
``வித்தினைத் தேடி, முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற;
பெறுவந் கென்பெணே!உந்தீபற``8
எனக் கூறிற்று. இன்னும் ஞானத்தை வேண்டி, அன்பை வேண்டாத சமயங்களைச் சுட்டி அந்நூல்,
``சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவியறாதேயென் றுந்தீபற;
அவ்வுரை கேளாதே; உந்தீபற``8
என்றும் கூறிற்று. இவ்வுந்திகளின் கருத்தைத் திருக்களிற்றுப் படியார்.
``வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்;
வித்துமதன் அங்குரமும் மெய்யுணரில், - வித்ததனில்
காணாமை யால்அதனைக் கைவிடுவர்; கண்டவர்கள்
பேணாமை யால்அற்றார் பேறு`` *
என விளக்கிற்று.
``விறகில் தீயின், நன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவு கோல்நட்(டு) உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே`` 3
என்னும் அப்பர் திருமொழியில், ``உறவு`` என்றது, சிவன் சீவர்களோடு அருள் காரணமாகக் கொண்டுள்ள ஆண்டான்
அடிமைத் தொடர்பினை அறியும் அறிவையும், ``உணர்வு`` என்றது, அத்தொடர்பினை அறிந்து, அவனையே விரும்பி, அவனிடத்திற் செலுத்தும் அன்பையும் குறிப்பன. அவற்றுள், அறிவைக் கோலாகவும் அன்பைக் கயிறாகவும் உருவகித்தமையால், `கயிற்றில் வழிக்கோல் இருந்து கடைதல் கூடாமையால் விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படாதவாறுபோல, அறிவாகிய ஞானம் இருந்தும் அன்பு இல்லாவிடில் சிவனிடத்தில் தோய்தல் கூடாமையால், மறைய நின்றிள்ள அவன் முன்னிற்றல் இயலாது` என்பது போவ்தவாறு அறிக. எனவே, இன்ப நிலைக்கு முடிநிலை ஏது அன்பேயாயிற்று.
இதனையே இம்மந்திரத்தால் அனுபவமாகக் கூறிமுடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும்,
``மனம்வி ரிந்து குவிந்தது! மாதவ
மனம்வி ரிந்து குவிந்தது வாயு;
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்;
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே``
என்பது யாப்பு, முற்றிலும் வேறுபட்டதுடன், பொருள் சிறப்பிலதாயும். இவ்விடத்திற்கு இயைபில்லாதாயும் இருத்தலின் நாயனாரது வாக்காகத் தோன்றவில்லை.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage